''தமிழ்நாட்டை காப்பாற்றும் பொறுப்பு தி.மு.க.வுக்கு இருக்கிறது'' முதல்-அமைச்சர் உணர்ச்சி பேச்சு


தமிழ்நாட்டை காப்பாற்றும் பொறுப்பு தி.மு.க.வுக்கு இருக்கிறது முதல்-அமைச்சர் உணர்ச்சி பேச்சு
x

‘‘தமிழ்நாடு என்ற கட்டிடத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தி.மு.க.வுக்கு இருக்கிறது’’, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சி மயமாக பேசினார்.

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் 'தத்துவ மேதை' டி.கே.சீனிவாசன் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:-

தத்துவமேதை டி.கே.சீனிவாசன் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். அவருடைய மகன் இளங்கோவனும் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தவர். தந்தையின் வார்ப்பாக விளங்கிக் கொண்டிருக்கும் இளங்கோவன், இந்த விழாவை ஏற்பாடு செய்து அதில் நான் பங்கெடுத்திருக்கிறேன் என்று சொன்னால், ஒரு குடும்பப் பாச உணர்வோடு நான் பங்கெடுத்திருக்கிறேன். அதுதான் உண்மை.

டி.கே.சீனிவாசன் போன்றவர்களது நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடுகிறோம் என்றால், அவரைப் பெருமைப்படுத்துவதற்காக மட்டுமல்ல. அவருக்கு நாம் நம்முடைய நன்றிக்கடனை செலுத்தும் அடையாளமாகவும்தான் இந்த விழா நடந்து கொண்டு இருக்கிறது.

திராவிட இயக்கம்

'நமது இயக்கம் இன்று தார்ச்சாலையில் பயணம் போய்க்கொண்டு இருக்கிறது. இந்தச் சாலையை போடுவதற்காக தார் காய்ச்சி அந்த வெப்பத்துக்கு பக்கத்தில் உடலை உருக்கி நின்று கொண்டிருந்த எத்தனையோ பேரில் டி.கே.சீனிவாசனும் ஒருவர்', என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். இதைவிட அவரது தியாகத்தை யாராலும் வர்ணிக்க முடியாது. சில நேரங்களில் கருணாநிதியை கூட டி.கே.சீனிவாசன் விமர்சித்து இருக்கிறார்.

திராவிட இயக்கம் என்றாலே, பேச்சாளர்கள் இயக்கம். எழுத்தாளர்கள் இயக்கம். கலைஞர்கள் இயக்கம். கதை, வசனகர்த்தாக்களின் இயக்கம். கவிஞர்களின் இயக்கம். பத்திரிகையாளர்கள் இயக்கம். படைப்பாளிகள் இயக்கம். முற்போக்காளர்களின் இயக்கம். மொத்தத்தில் இது ஓர் அறிவியக்கம். இந்த அறிவியக்கத்தின் ஆற்றல் மிக்க ஆளுமைகளில் ஒருவர்தான் டி.கே.சீனிவாசன்.

கொள்கையை விளக்கும் கதைகள்

அண்ணா, கருணாநிதி, டி.கே.சீனிவாசன், தில்லை வில்லாளன், ராதாமணாளன், முல்லை சக்தி, பண்ணன், சிறுகதை மன்னர் எஸ்.எஸ். தென்னரசு என்று பலரும் சிறுகதைகள் எழுதினார்கள்,

நாடகங்களை இயற்றினார்கள், புதினங்களைத் உருவாக்கினார்கள். இவை அனைத்தும் கற்பனை கதைகளாக மட்டுமல்ல கொள்கைகளை விளக்கும் கதைகளாக, நமது லட்சியத்தை எடுத்துக்காட்டும் கதைகளாக அமைந்திருந்தன. கதைகளின் வழியாக, நாவல்களின் வழியாக, வீதி நாடகங்கள் வழியாக நம்முடைய இயக்கத்தின் கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்பினார்கள்.

அண்ணாவின் படைப்புகள் முழுமையாக வெளிவந்ததை போல, கருணாநிதியின் கடிதங்கள் முழுமையாக வெளிவந்ததை போல மற்ற படைப்பாளிகளது படைப்புகளும் வெளிவர வேண்டும். திராவிட இயக்கம் என்பது அரசியல் இயக்கம் மட்டுமல்ல, இது அறிவியக்கம். நமது அறிவியக்கக் கோட்பாடுகளை அறிய உதவும் இத்தகைய நூல்கள் ஏராளமாக வர வேண்டும். இன்றைய தேவை இதுதான்.

பொறுப்பும், கடமையும்...

தி.மு.க. இளைஞரணியின் சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டங்கள் 234 தொகுதியிலும் நடந்து முடிந்துள்ளது. அத்தோடு அப்பணி முடியவில்லை. தொடர வேண்டும் என்கிற வேண்டுகோளை கட்சி தலைவர் என்கிற முறையில் நான் எனது அன்பான வேண்டுகோளாக அல்ல, கட்டளையாகப் பிறப்பிக்கிறேன். அது தொடரவேண்டும் என நான் விரும்புகிறேன்.

இந்த பாசறை கூட்டங்களில் பங்கெடுத்த இளைஞர்கள் இது போன்ற புத்தகங்களைத் தேடி படியுங்கள். உங்களை கூர் தீட்டிக்கொள்ளுங்கள். கொள்கை இருந்தால்தான் கட்சி. கட்சி இருந்தால்தான் ஆட்சி என்பதில் நான் எப்போதும் உறுதியாக இருக்கிறேன். கொள்கையை காப்பாற்றுவதற்காக எதையும் செய்யலாம், எதையும் இழக்கலாம். ஆனால் பதவியை காப்பாற்றுவதற்காக எதையும் செய்துவிட முடியாது. இத்தகைய கொள்கை உரத்தை நமக்கு ஏற்படுத்திக்கொடுத்தவர்கள்தான் டி.கே.சீனிவாசனை போன்ற எழுத்தாளர்கள்.

தமிழ்நாடு என்ற கட்டிடத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்குத்தான் இருக்கிறது. தத்துவ மேதையின் நூற்றாண்டு விழாவான இன்று, அதற்கு நாம் அத்தனை பேரும் உறுதி எடுத்துக்கொள்வோம்.

இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன், டி.ஆர்.பாலு எம்.பி., திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story