தி.மு.க. ஆட்சியில் எந்த துறையிலும் ஊழல் நடைபெறவில்லை.


தி.மு.க. ஆட்சியில் எந்த துறையிலும்  ஊழல் நடைபெறவில்லை.
x

தி.மு.க. ஆட்சியில் எந்த துறையிலும் ஊழல் நடைபெறவில்லை என்றும், அண்ணாமலை மிரட்டலுக்கு பயப்படமாட்டோம் என்றும் அமைச்சர் இ.பெரியசாமி பேசினார்.

திண்டுக்கல்

கருணாநிதி பிறந்தநாள் விழா

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் நேற்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதை யொட்டி திண்டுக்கல் அருகே தோட்டனூத்து இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 1,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

இதற்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் புதிதாக கட்டப்பட்டு வரும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகளை அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு காலத்திற்குள் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டி ஆகிய 3 இலங்கை அகதிகள் முகாம்களை ஒருங்கிணைத்து தோட்டனூத்து கிராமத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகள் இன்னும் சில மாதங்களில் பணிகள் நிறைவுற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடியில் விடுபட்ட பயனாளிகளுக்கு துணை பதிவாளர் தலைமையில் குழு அமைத்து தகுதியுடையவர்களுக்கு கடன் தள்ளுபடி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊழல் நடைபெறவில்லை

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மிரட்டலுக்கு நாங்கள் பயப்பட போவதில்லை. ஊழல் நடந்திருக்கிறதா என கோர்ட்டு மட்டுமே முடிவு செய்யும். தி.மு.க. ஆட்சியில் எந்த துறையிலும் ஊழல் நடைபெறவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த காரணத்தினால் தான் சட்டமன்ற தேர்தலில் 4 இடங்களில் பா.ஜ.க. வெற்றிபெற்றது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. தனித்துப்போட்டியிட்டு வெற்றிபெற முடியுமா?. பா.ஜ.க.வில் பதவிக்கு வருபவர்கள் சுயலாபத்திற்காக வருகின்றனர். ஆளுங்கட்சியை குறைக்கூறி கவர்னர், மத்திய இணை அமைச்சர் என பதவியை பெறுகின்றனர். தமிழக மக்களின் நலன் கருதி செயல்படுவதில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மாவட்ட வன அலுவலர் பிரபு, திண்டுக்கல் ஒன்றிய குழு தலைவர் ராஜா, துணைத்தலைவர் சோபியா ராணி பாஸ்கர், தி.மு.க. ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், தோட்டனூத்து ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலரவன், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story