"நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்" -அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
“நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்” என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
எட்டயபுரம்:
"நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்" என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
பொதுக்கூட்டம்
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் நடந்தது. விளாத்திகுளத்தில் நடந்த கூட்டத்திற்கு மாா்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், அன்புராஜன், செல்வராஜ், ராமசுப்பு, மும்மூர்த்தி, சின்னமாரிமுத்து, காசி விஸ்வநாதன், நவநீதகண்ணன், மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனர். விளாத்திகுளம் நகர செயலாளர் வேலுசாமி வரவேற்று பேசினாா். தலைமை கழக பேச்சாளர்கள் அன்புவாணன், ரம்ஜான்பேகம் ஆகியோா் பேசினர்.
அமைச்சர் கீதாஜீவன்
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-
நீதிக்கட்சி காலத்தில் இருந்து நமது உரிமையை பெற்றுள்ளோம். கல்வி கற்கும் நிலை. சமமாக இருக்கையில் இருக்கும் நிலையில் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. எங்கேயும் அடக்கு முறை இல்லை. இந்த நிலையை உருவாக்கியது திராவிட மாடல்.
மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு குறைவான நிதி போதும் என்று ஒன்றிய அரசு நெருக்கடி தருகிறது. அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் இன்று வரை வரவில்லை. மற்ற மாநிலங்களில் தொடங்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் முடிவு பெற்று விட்டது.
புறக்கணிப்பு
எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் வீட்டு கஜானாவை நிரப்புவதை மட்டும் கவனமாக கொண்டிருந்தார். மற்ற எதையும் செய்யவில்லை. மக்களை பற்றி கவனிக்காமல் அமைச்சர்களும் தங்களது வீட்டு கஜானாவை நிரப்பினார்கள். ஆகையால் அவர்கள் இன்று புறக்கணிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்றும். மகளிருக்கான ரூ.1,000 தொகை நிச்சயமாக கொடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.
புதிதாக முளைத்துள்ள பா.ஜ.க.விற்கு அவர்களுடைய கொள்கை, கோட்பாடு தெரியாது. மகாகவி பாரதியார், பெரியார், அண்ணா போன்ற தலைவர்களால் தமிழகத்தில் இவ்வளவு பெரிய வளர்ச்சி. ஆனால் வட இந்தியாவில் ஆதிதிராவிடர்களுக்கு இன்றும் கல்வி மறுக்கப்படுகிறது. பெண்களுக்கு சம உரிமை இல்லை. தமிழகத்தை பா.ஜனதாவால் அசைக்க முடியாது.
நாடாளுமன்ற தேர்தல்
மற்ற மாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கி உள்ளது. தமிழகத்தில் உள்ள எம்.பி.க்களுக்கு தொகுதிக்கான நிதியை வழங்கவில்லை.
ஆகவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், பேரூராட்சி மன்ற தலைவர்கள் அய்யன்ராஜ், ராமலட்சுமி, வனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகில் நடந்தது.
வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் குத்தாலம் அன்பழகன் சிறப்புரையாற்றினார். இதில் துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.