தி.மு.க. ஆட்சியில் தொழில்துறை வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது;ஈரோட்டில் அமைச்சர் மெய்யநாதன் பேச்சு
தி.மு.க. ஆட்சியில் தொழில்துறை வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது என்று ஈரோட்டில் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
தி.மு.க. ஆட்சியில் தொழில்துறை வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது என்று ஈரோட்டில் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
6 அமைச்சர்கள் பங்கேற்பு
அசோசியேசன் ஆப் டெக்ஸ்டைல் பிராசசர்ஸ் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க தலைவர் வில்லரசம்பட்டி முருகேசன் தலைமை தாங்கினார். செயலாளர் அருணா பழனிசாமி வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சு.முத்துசாமி, காந்தி, மெய்யநாதன், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்களிடம் சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். அதற்கு பதில் அளித்து பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:-
ஆன்லைன்
தமிழகத்தில் மொத்தம் 52 ஆயிரத்து 500 தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 12 ஆயிரம் தொழிற்சாலைகள் சிகப்பு குறியீட்டிலும், 13 ஆயிரத்து 500 ஆரஞ்சு குறியீட்டிலும், 27 ஆயிரத்து 500 தொழிற்சாலைகள் பச்சை குறியீடு பட்டியலிலும் உள்ளது. கடந்த காலங்களில் தொழிற்சாலைகளின் உரிமத்தை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். இதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்தன. புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்தால் வேண்டுமென்றே காலம் கடத்தப்பட்டு வந்ததால் தடையின்றி தொழிற்சாலைகள் நடத்த முடியாத நிலை இருந்து வந்தது.
இந்தநிலையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு தொழிற்சாலைகள் புதுப்பித்தல் பணியானது எளிமையாக்கப்பட்டு உள்ளது. அதன்படி சிகப்பு குறியீட்டில் இயங்கும் தொழிற்சாலைகளின் உரிமத்தை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தால் போதுமானது. ஆரஞ்சு குறியீடு தொழிற்சாலைகள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், பச்சை குறியீடு தொழிற்சாலைகள் 14 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் புதுப்பித்தால் போதும். அதிலும், ஆன்லைன் மூலமாக புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டு உள்ளது.
பொது சுத்திகரிப்பு நிலையங்கள்
அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காக ஆன்லைன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற ஒரு திட்டம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 10 இடங்களில் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. அதில் 2 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் ஈரோட்டில் அமைக்கப்பட உள்ளன. தி.மு.க. ஆட்சியில் தான் தொழில்துறை வேகமாக முன்னேற்றமடைந்து வருகிறது. ஈரோட்டின் வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது கூறியதாவது:-
புதிய திட்டங்கள்
தமிழகத்தில் தொழில்துறையை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தி.மு.க. ஆட்சி அமைந்ததும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மாவட்டந்தோறும் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது. அப்போது கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் ஈரோடு மாவட்டம் பல்வேறு நிலைகளில் புறக்கணிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றதையடுத்து ஈரோட்டின் வளர்ச்சிக்காக மட்டும் அவர் ரூ.758 கோடிக்கு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
இதுதவிர பொதுப்பணித்துறை சார்பில் செயல்படுத்தப்பட வேண்டிய 13 திட்டங்களை நிறைவேற்ற என்னிடம் அமைச்சர் சு.முத்துசாமி பட்டியல் கொடுத்து உள்ளார். இந்த திட்டங்களை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து சென்று அனுமதி பெற்று விரைவில் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.