''திக்கற்றவர்களுக்கு திசையாக தி.மு.க. அரசு செயல்படுகிறது'' முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


திக்கற்றவர்களுக்கு திசையாக தி.மு.க. அரசு செயல்படுகிறது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x

‘‘திக்கற்றவர்களுக்கு திசையாக தி.மு.க. அரசு செயல்படுகிறது’’ என்றும், ‘‘அன்பும், உரிமையும் இந்த அரசின் 2 கண்கள்’’ என்றும், தென்னிந்திய திருச்சபை பவளவிழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 24 பேராயங்களை உள்ளடக்கியது ஆகும். தென்னிந்திய திருச்சபை தனது பவள விழாவினை கொண்டாடி வருகிறது. பவள விழா கொண்டாட்டத்தின் நிறைவு நிகழ்ச்சி, சென்னை வானகரத்தில் உள்ள 'இயேசு அழைக்கிறார்' தோட்ட வளாகத்தில் நேற்று நடந்தது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

இதில் தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயர் ஏ.தர்மராஜ் ரசாலம், தமிழக அரசின் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., தென்னிந்திய திருச்சபையின் துணை பேராயர் கே.ரூபென் மார்க், பொதுச்செயலாளர் பெர்னான்டஸ் ரத்தின ராஜா, கவுரவ பொருளாளர் பி.விமல் சுகுமார், சென்னை பேராயர் ஜே.ஜார்ஜ் ஸ்டீபன், பேராய உப தலைவர் எஸ்.அசோக்குமார், பேராய செயலர் மேன்யல் டைட்டஸ், பேராய பொருளாளர் ஆர்.ஏசுதாஸ், பேராயரின் ஆயர் ஜி.ஏர்னஸ்ட் செல்வதுரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ஒற்றுமை உணர்வே நம்மை காப்பாற்றும்

தென்னிந்திய திருச்சபையின் பவள விழாவை கடந்த ஆண்டு தொடங்கி வைத்து, நான் உரையாற்றினேன். இன்று (நேற்று) நிறைவு விழாவிலும் பங்கேற்கக்கூடிய வாய்ப்பினை பெற்றிருக்கிறேன். நான் இல்லாமல் நீங்கள் இல்லை. நீங்கள் இல்லாமல் நான் இல்லை.

40 லட்சம் உறுப்பினர்களை கொண்ட மிகப்பெரிய திருச்சபைகளில் ஒன்றாக விளங்குவதற்கு காரணம் இந்த ஒற்றுமை உணர்வுதான். ஒற்றுமை உணர்வுதான் நம்மை எப்போதும், என்றும் காப்பாற்றும். அதனை உணர்ந்த காரணத்தால்தான் உங்கள் திருச்சபையினுடைய குறிக்கோளாக ஒற்றுமையை வலியுறுத்தி வருகிறீர்கள்.

திராவிட மாடலின் நோக்கம்

மனிதர்கள் அனைவரும் சமம் என்பதே சமத்துவம். யாரையும் வேற்றுமையாக பார்க்காதே என்பது தான் சகோதரத்துவம். அனைவருடனும் சேர்ந்து வாழ் என்பது தான் ஒற்றுமை. ஏழைகள் மீது கருணை காட்டு என்பது தான் இரக்கம். அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதே நீதி. மற்றவர்களுக்காக வாதாடுவது தியாகம். உன்னிடம் இருப்பதை இல்லாதோரிடம் கொடு என்பதே பகிர்தல். இதைத்தான் கிறிஸ்தவம் சொல்கிறது. இந்த குணங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் இருந்தால் அதுதான் சமத்துவ நாடாக அமையும். இத்தகைய நோக்கங்கள் கொண்ட திராவிட மாடல் ஆட்சியை நாங்கள் நடத்தி வருகிறோம்.

எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடலின் அடிப்படை நோக்கம். பசித்த வாய்க்கு உணவாக, தவித்த வாய்க்கு தண்ணீராக, திக்கற்றவர்களுக்கு திசையாக, யாருமில்லாதவர்களுக்கு ஆதரவாக இருக்க நினைக்கும் அரசாக நமது அரசு செயல்பட்டு வருகிறது. நமது அரசு என்பது அனைவரையும் உள்ளடக்கிய அரசு தான். அன்பும், உரிமையும் இந்த அரசுக்கு 2 கண்கள். ஒரு கை உழைக்கவும், இன்னொரு கை உணவூட்டும் அரசாகவும் செயல்பட்டு வருகிறோம்.

'உலகுக்கு உப்பாயிருங்கள்'

75 ஆண்டுகளை கடந்திருக்கும் தென்னிந்திய திருச்சபையானது பல நூறாண்டுகளை காணும். எத்தனை நூறாண்டுகள் ஆனாலும் மக்களுக்கு அன்பை போதிக்கும் அமைப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. உலகுக்கு உப்பாயிருங்கள். உலகுக்கு ஒளியாயிருங்கள். இதுவே எனது அன்பான வேண்டுகோள்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொல்.திருமாவளவன்

தென்னிந்திய திருச்சபையின் பவளவிழா நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்போது, ஒட்டுமொத்த இந்தியாவையும், அரசமைப்பு சட்டத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும். சனாதன சக்திகளை தனிமைப்படுத்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறினார்.

சிறப்பு வழிபாடு

முன்னதாக தென்னிந்திய திருச்சபையின் (சி.எஸ்.ஐ.) 75-வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு, சென்னை சி.எஸ்.ஐ. தூய ஜார்ஜ் பேராலயத்தில் தென்னிந்திய திருச்சபையை உள்ளடக்கிய தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களின் ஒட்டுமொத்த 24 பேராயங்களும் ஒன்றிணைந்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

இந்த விழாவில், சென்னை பேராயத்தின் பேராயர் ஜே.ஜார்ஜ் ஸ்டீபன், பெண்களுக்கான காதுகேளாதோர் கல்லூரியும் மற்றும் ஏழை-எளியோருக்கான 75 குடியிருப்புகள் கட்டும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். பிரதம பேராயர் ஏ.தர்மராஜ் ரசாலம் சிறப்புரையாற்றினார்.


Next Story