''தி.மு.க.தான் இனி நிரந்தர ஆளுங்கட்சி'' மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் முதல்-அமைச்சர் பேச்சு
‘‘தி.மு.க.தான் இனி நிரந்தர ஆளுங்கட்சி’’ என மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் 4-வது மாநில மாற்றுத்திறனாளிகள் மாநாடு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி திடலில் நேற்று தொடங்கியது.
மாநாட்டிற்கு சங்க மாநில தலைவர் ஜான்சிராணி தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் பி.எஸ்.பாரதி அண்ணா, எஸ்.நம்புராஜன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:-
ரூ.759 கோடி நலத்திட்டங்கள்
மாற்றுத்திறனாளி சகோதரர்கள் மீது அன்பு கொள்ள வேண்டும், தேவையான வசதிகளை கேட்காமலேயே செய்துதர வேண்டும் என்பது கருணாநிதி வகுத்து தந்த பாதை. மாற்றுத்திறனாளிகள் என்ற சுயமரியாதையை சூட்டியவர் கருணாநிதி. உங்களை தனது சொந்தங்களாகவே கருணாநிதி எண்ணினார். தி.மு.க. அரசு அமைந்தவுடன் ஒவ்வொரு துறைக்கும் அமைச்சர்களை நியமித்தேன். ஆனால் மாற்றுத்திறனாளிகள் துறையை மட்டும் கருணாநிதி போல நானே வைத்துக்கொண்டேன்.
அதன் மூலம் எனது விருப்பங்களை செய்து தர விரும்பினேன். 15 மாதங்களில் ரூ.759 கோடி மதிப்பிலான எண்ணற்ற நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகளுக்காக இந்த அரசு செய்து தந்திருக்கிறது.
கருணாநிதியும், சக்கர நாற்காலியும்...
வயது முதிர்வு காரணமாக கருணாநிதி சக்கர நாற்காலியை பயன்படுத்தினார். அவரது உடல் எடையை தாங்கும் சக்தி கால்களுக்கு இல்லாத நிலையில் அவர் அதை பயன்படுத்தினார்.
ஆனால் காலமெல்லாம் இந்த சக்கர நாற்காலியை பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகள் எவ்வளவு துன்பத்தை அனுபவிப்பார்கள் என்று எண்ணித்தான் மாற்றுத்திறனாளிகள் துறையை கண்ணும் கருத்துமாக கருணாநிதி கவனித்தார். எங்களையும் அப்படி கவனிக்க சொன்னார்.
மாற்றுத்திறனாளிகள் முகங்களில் மகிழ்ச்சியை பார்க்கிறேன். கட்டணமில்லா பஸ்களில் செல்லும் பெண்கள் முகங்களில், கல்லூரிக்கு படிக்க வந்தால் ரூ.1,000 உதவித்தொகை கிடைக்கும் என்ற வகையில் அரசு பள்ளி மாணவிகள் முகங்களில், பசிப்பிணி போக்கும் காலை சிற்றுண்டி உண்ணும் குழந்தைகள் முகங்களில், இலவச மின்சாரம் பெறும் விவசாயிகளின் முகங்களில், நகைக்கடன்-கூட்டுறவு கடன் தள்ளுபடி பெற்றோர் முகங்களில் காண்பது உண்மையான மகிழ்ச்சி.
திராவிட மாடல்
தங்கள் கைகளில் அதிகாரம் இருந்தபோது மக்களை பற்றி கவலைப்படாத சிலர், இன்றைக்கு இந்த ஆட்சியின் மீது இட்டுக்கட்டிய கதைகளை எல்லாம் அவதூறுகளாக பரப்ப நினைக்கிறார்கள். ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி எப்போதும் மக்களுடன் இருப்பவர்கள் நாங்கள். அதிகாரத்துக்கு வந்துவிட்ட காரணத்தால் விலகி செல்பவர்கள் அல்ல.
அனைத்து மக்களின் அரசாக தி.மு.க. ஆட்சி நடந்து வருகிறது. தி.மு.க. ஆட்சியில் ஏதோ 4 முதல்-அமைச்சர்கள் இருக்கிறார்கள் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். 4 அல்ல, யாரெல்லாம் நல்ல ஆலோசனைகள் வழங்குகிறார்களோ, அவர்கள் அனைவரும் சேர்ந்துதான் இந்த ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆட்சிதான் தி.மு.க. ஆட்சி.
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற அண்ணா சொன்னபடி ஆட்சி நடக்கிறது. இது கட்சியின் ஆட்சி அல்ல, இனத்தின் ஆட்சி. இந்த ஆட்சியை வழிநடத்துவது திராவிட மாடல் என்ற பெரும் தத்துவம்.
மக்கள் நம்பிக்கை வீண்போகாது
அனைவரும் விரும்பக்கூடிய ஆட்சியாக இந்த ஆட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு இன்னும் பல கோரிக்கைகள் இருக்கிறது. அதை நான் மறுக்கவில்லை, மறைக்கவில்லை. மறக்கவும் இல்லை. அவைகளை எல்லாம் நிதி ஆதாரங்களை பொறுத்து சட்ட விதிகளை அடிப்படையாக வைத்து உறுதியாக நிறைவேற்றி தருவோம். இது உங்கள் ஆட்சி. இது நிரந்தரமாக ஆளப்போகும் ஆட்சி.
என் மீது உள்ள இறுமாப்பில் இதை பேசவில்லை. உங்கள் மீதான நம்பிக்கையில் சொல்கிறேன். உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி தருவேன். நீங்கள் பயன்படுத்தக்கூடிய கருவி போல உங்களுக்கு என்றும் உதவி செய்யக்கூடியவனாக நான் இருப்பேன். என் கையில் மனு கொடுத்தால் அது நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கை மக்களுக்கு வந்திருக்கிறது. காரியம் முடிந்துவிட்டது போல அப்போதே நன்றி கூறுகிறார்கள். அந்த நம்பிக்கை எப்போதுமே வீண்போகாது.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., மறைமலைநகர் நகரமன்ற தலைவர் ஜெ.சண்முகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.