'சிறுபான்மை மக்களின் நலனில் எப்போதும் அக்கறை காட்டி வரும் அரசு தி.மு.க.தான்' முதல்-அமைச்சர் பேச்சு


சிறுபான்மை மக்களின் நலனில் எப்போதும் அக்கறை காட்டி வரும் அரசு தி.மு.க.தான் முதல்-அமைச்சர் பேச்சு
x

சிறுபான்மை மக்களின் நலனில் எப்போதும் அக்கறை காட்டி வரும் அரசு தி.மு.க.தான் என்று சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. 'அன்பின் கிறிஸ்துமஸ் விழா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார்.

இதில் அமைச்சர்கள் க.பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, காந்தி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் ஐ.லியோனி, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், செங்கை மறைமாவட்ட ஆயர் அ.நீதிநாதன், தென் இந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன், சூரியனார் கோவில், ஶ்ரீ சிவ யோகிகள் மடம் 28-வது குருமகா சன்னிதானம் ஶ்ரீல ஶ்ரீ மகாலிங்க தேசிக பராமாச்சாரியார் சுவாமிகள், லயோலா கல்லூரி அதிபர் பிரான்சிஸ் சேவியர், தென் இந்திய திருச்சபை பொதுச்செயலாளர் பெர்னாண்டஸ் ரத்தினராஜ், பெந்தேகோஸ்தே திருச்சபையின் மாமன்ற துணை பேராயர் டேவிட் பிரகாசம், சேலம் ஆத்தூர் இசுலாமிய கல்விக்கூட தலைவர் அ.முகமது இம்ரானுல்லா பாகவி, லிபா இயக்குனர் ஜோ.அருண், கன்னியாகுமரி மார்த்தாண்டம் ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ், அடைக்கல அன்னை சபை தலைமை சகோதரி மரிய பிலோமினா, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கேக் வெட்டி ஊட்டினார்

கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டி மேடையில் இருந்த அமைச்சர்கள் உள்பட கிறிஸ்தவ பேராயர், பாதிரியார்களுக்கு ஊட்டிவிட்டு மகிழ்ந்தார்.

அதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

அக்கறை காட்டி வரும் அரசு

இயேசுவின் போதனைகள் அன்பு செய்வதின் அவசியத்தை கூறுகிறது. அவரது போதனைகளை பின்பற்றினாலே உலகம் முழுவதும் அமைதி தவழும். அவர் கூறிய பண்புகள் உலகத்தின் குணங்களாக மாற வேண்டும்.

மக்களிடையே வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் ஒரு தாய் மக்களாக பார்க்கும் அன்புள்ளம் கொண்ட அரசாகத்தான் தி.மு.க. இயங்கி வருகிறது. இவை அனைத்தையுமே உள்ளடக்கியதுதான் திராவிட மாடல் ஆட்சி. இதுவே இந்த ஆட்சியின் தத்துவம். சிறுபான்மை மக்களின் நலனில் எப்போதும் அக்கறை காட்டி வரும் அரசு தி.மு.க.தான்.

3 கோரிக்கைகள்

இங்கு 3 கோரிக்கைகள் விடுக்கப்பட்டது. முதல் கோரிக்கையாக சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.

2-வது கோரிக்கை, ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள் தொடர்பான கோரிக்கை நீதிமன்றத்தில் இருக்கிறது. ஆனால் 2006-2011 தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு என்ன சலுகை வழங்கப்பட்டதோ, அதனை ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கு வழங்கியது தி.மு.க. ஆட்சிதான். 3-வது கோரிக்கை உதவித்தொகை நிறுத்தப்பட்டிருக்கிறது. அதனை மத்திய அரசு தான் நிறைவேற்றவேண்டும். மத்திய அரசுக்கு தொடர்ந்து எழுதிக்கொண்டு இருக்கிறோம். காத்திருப்போம். இவ்வளவு நாள் காத்திருந்தீர்கள், இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்கமாட்டீர்களா? மத்திய அரசு முறையாக செய்வதற்கு முன்வரவில்லையென்றால் மாநில அரசு எந்த வகையில் உதவி செய்யமுடியுமோ, அந்த உதவியை நிச்சயமாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்.

உழைப்பு

என்னை ஆளாக்கிய கலைஞர், என்னிடத்தில், மு.க.ஸ்டாலினிடம் பிடித்தது என்னவென்று கேட்டால், உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று சொன்னாரே, மேலும், மேலும் உழைக்கவேண்டும் என்ற அந்த உணர்வுதான் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. நமக்குள் இருக்கக்கூடிய வேற்றுமைகளை களைந்து, ஒற்றுமை உணர்வோடு நமக்கான ஒளிமயமான எதிர்காலத்தை அமைக்க நாம் பணியாற்றவேண்டும், பாடுபடவேண்டும். இயேசு பிரானின் அன்பு கட்டளையை பின்பற்றி நமது மனங்கள் நிறையட்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழா மேடைக்கு வருவதற்கு முன்னதாக, விழா நடைபெறும் வளாகத்தில் இருந்த 'கிறிஸ்து பிறப்பு பிரமாண்ட குடிலை' முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததுடன், இறுதியில் நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.


Next Story