ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த தி.மு.க. பிரமுகர் தற்கொலை


ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த தி.மு.க. பிரமுகர் தற்கொலை
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடியில் ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த தி.மு.க. பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

திட்டக்குடி,

சோடா கம்பெனி உரிமையாளர்

திட்டக்குடி பெருமுளை ரோட்டை சேர்ந்தவர் உத்ராபதி (வயது 70). தி.மு.க. பிரமுகரான இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு சோடா கம்பெனி நடத்தி வந்தார். பின்னர் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் வர்த்தகத்தில் (ஆன்லைன் டிரேடிங்) தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இதில் தனது சொத்துக்கள் மூலம் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். ஆனால் ஆன்லைன் வர்த்தகத்தில் இழப்பு ஏற்பட்டதால், சொத்துக்கள் அனைத்தையும் இழந்தார்.

அதன் பிறகு இழந்த பணத்தை எப்படியாவது மீட்டு விடலாம் என்ற நோக்கில் உத்ராபதி பலரிடம் கடன் வாங்கி, மீண்டும் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். அதிலும் அவர் பணத்தை இழந்ததால், கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

தூக்கிட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் சாப்பிட்டு விட்டு, வெளியே சென்றார். பின்னர் உத்ராபதி, கீழ்ச்செருவாய் கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு சென்று அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட உத்ராபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை

தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த தி.மு.க. பிரமுகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story