தி.மு.க. செயற்குழு கூட்டம்


தி.மு.க. செயற்குழு கூட்டம்
x

தி.மு.க. செயற்குழு கூட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி,

விருதுநகரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் முப்பெரும் விழாவில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த திரளான தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார்.

செயற்குழு கூட்டம்

சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் வரவேற்றார். மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசி முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கி பேசியதாவது:- தமிழகத்தில் சிறப்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார். அவரது ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆட்சிக்கு பெருமை சேர்க்கும் வகையில் நாளை(வியாழக்கிழமை) விருதுநகர் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் தலைமையில் முப்பெரும் விழா நடக்கிறது.

இந்த மாநாட்டிற்கு இரட்டை குழல் துப்பாக்கி போல் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வரும் அந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோருக்கு தோள் கொடுக்கும் வகையில் நமது மாவட்டத்தில் இருந்து ஏராளமான தொண்டர்கள் அணிவகுத்து வந்து அந்த மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்படைய செய்ய வேண்டும்.

பங்கேற்க வேண்டும்

அதற்கு நமது மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் பொறுப்பேற்று அதிகளவில் வாகனங்களில் தொண்டர்களை அழைத்து சென்று விழாவில் பங்கேற்க செய்ய வேண்டும். கூட்டம் நடைபெறுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே மாநாட்டு திடலுக்கு தொண்டர்கள் சென்றுவிட வேண்டும். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிதான் நிரந்தரமான ஆட்சியாக இருக்கும். அதற்கு காரணம் நமது போட்டியாக இருந்த கட்சியின் நிலைமை தற்போது கேள்விக்குறியாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் ஜோன்ஸ் ரூசோ, மணிமுத்து, நகராட்சி தலைவர்கள் துரைஆனந்த் (சிவகங்கை), மாரியப்பன்கென்னடி (மானாமதுரை), முன்னாள் எம்.எல்.ஏ. சுப.துரைராஜ், தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் கரு.அசோகன், ஒன்றிய செயலாளர்கள் சுப.மதியரசன், கோட்டையூர் ஆனந்தன், அண்ணாத்துரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார்,அரசுவக்கீல் பாலசுப்பிரமணியம் மற்றும் மகளிரணி அமைப்பாளர், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் காரைக்குடி நகர செயலாளர் குணசேரகன் நன்றி கூறினார்.


Next Story