தி.மு.க. தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல்: மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியின்றி தேர்வு ஆகிறார்


தி.மு.க. தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல்: மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியின்றி தேர்வு ஆகிறார்
x

தி.மு.க. தலைவர் பதவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். நாளை நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

சென்னை,

தி.மு.க.வின் 15-வது உள்கட்சி தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில், ஒன்றியம், நகரம், நகரியம், பேரூர், பகுதி, மாவட்டம், மாநகர செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிந்து, இதில் தேர்வானவர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.

இந்த நிலையில், தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கை குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் 9-ந் தேதி (நாளை) நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் நாளை நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் முன்னிலையில் அறிவிக்கப்படும்.

மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்

இந்த உள்கட்சி தேர்தலில் தி.மு.க. தலைவராக போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று அண்ணா அறிவாலயம் வந்தார். மதியம் 12.10 மணிக்கு தி.மு.க. தலைவர் பதவிக்கான தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரது மனுவை பொதுக்குழு உறுப்பினர்கள் 5 பேர் முன்மொழிந்து, 5 பேர் வழிமொழிந்து இருந்தனர். வேட்பு மனு கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்தப்பட்டது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து, பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் மீண்டும் போட்டியிட மனுதாக்கல் செய்தனர். அவர்களும் முறைப்படி வேட்பு மனு கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்தியதுடன், அவர்களுடைய மனுக்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் 5 முன்மொழிந்து, 5 பேர் வழிமொழிந்து இருந்தனர்.

அமைச்சர்கள் ஆதரவு வேட்பு மனு

அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் நேற்று மாலை 5 மணி வரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரில் போட்டிப்போட்டுக் கொண்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அதிகபட்சமாக அமைச்சர் ஆவடி நாசர் 32 வேட்பு மனுக்களை மு.க.ஸ்டாலின் பெயரில் தாக்கல் செய்தார். வேட்பு மனு கட்டணம் ரூ.50 ஆயிரம் மற்றும் வேட்பு மனு தாக்கலுக்கான விண்ணப்ப கட்டணம் ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்த போது. அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொண்டர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு கலைஞர் அரங்கத்தில் இருந்து வெளியே வந்ததும், தனது காரில் ஏறாமல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை பார்த்து வணக்கம் செலுத்தியபடி அறிவாலய வளாகத்திற்குள் நடந்தபடியே தனது அலுவலக அறைக்கு சென்றார். இவ்வாறு நடந்து வரும் போது, கட்சி நிர்வாகிகள் அவருக்கு பொன்னாடை மற்றும் புத்தகங்களை பரிசாக வழங்கினர். மேலும், அலுவலக அறையில் இருந்தபடி முக்கிய நிர்வாகிகளை சந்தித்துவிட்டு புறப்பட்டு சென்றார்.

முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் அண்ணாவின் நினைவிடங்களுக்கு சென்று வேட்பு மனுவை வைத்து வணங்கிவிட்டு வந்தார். அதேபோன்று, வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர், கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்கு சென்று கருணாநிதியின் உருவப்படத்துக்கு ரோஜாப்பூவை வைத்து வணங்கினார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளியில் நாளை நடைபெற உள்ள தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடைபெற்ற வேட்பு மனு தாக்கலின் போது சுமார் 500-க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டிருந்தன. எத்தனை மனுக்கள் வேட்பு மனுவாக தாக்கல் செய்யப்பட்டன என்பது பொதுக்குழுவில் அறிவிக்கப்படும்.


Next Story