தி.மு.க. ஆட்சியில் எங்கு பார்த்தாலும் மணல் கொள்ளை நடக்கிறது
ஓசூர்:-
ஓசூர் ஜூஜூவாடியில் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜே.எம்.சீனிவாசன் தலைமையில் நடந்தது. மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் சங்க செயலாளர் சென்னகிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக தம்பிதுரை எம்.பி., முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை துணைத்தலைவர் கோவிந்தராஜ், தலைமைக்கழக பேச்சாளர் குலாப்ஜான் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ. சி.வி.ராஜேந்திரன், ஓசூர் மாநகராட்சி எதிர்க்்கட்சி தலைவர் எஸ்.நாராயணன், மாவட்ட துணை செயலாளர் மதன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ரவிச்சந்திரன், பகுதி செயலாளர்கள் அசோகா, பி.ஆர்.வாசுதேவன், மஞ்சுநாத், ராஜி திரளாக கலந்து கொண்டனர்.
பின்னர் தம்பிதுரை எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தாமிரபரணியில் மணல் கொள்ளை, பாலாற்றில் மணல் கொள்ளை, பல ஆறுகளில் எங்கு பார்த்தாலும் மணல் கொள்ளை இந்த ஆட்சியில் நடந்து வருகிறது. இந்த மணல் கொள்ளையை தடுக்க வந்தால் அதிகாரிகள் கொலை செய்யப்படுகிறார்கள். மு.க.ஸ்டாலின் தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கின்ற வகையில் கொண்டு வந்த சட்டத்துக்கு எதிர்ப்பு வந்ததால் அதனை வாபஸ் பெற்றார். இது போன்ற சட்டங்களை கொண்டு வந்தால் கவர்னர் எப்படி கையெழுத்துபோடுவார்?.
இவ்வாறு அவர் கூறினார்.