தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி கோட்டை நோக்கி பா.ஜ.க. பேரணி


தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி கோட்டை நோக்கி பா.ஜ.க. பேரணி
x

தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி கோட்டை நோக்கி நேற்று பா.ஜ.க.வினர் பேரணியாக சென்றனர்.

சென்னை,

தி.மு.க. அரசின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நேற்று கோட்டையை நோக்கி பேரணி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பேரணிக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர் கரு.நாகராஜன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

தமிழக பா.ஜ.க. அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம், துணைத்தலைவர்கள் வி.பி.துரைசாமி, ஏ.ஜி.சம்பத், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், வர்த்தகரணி துணைத்தலைவர் சி.ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் இரா.பிரகாஷ், முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா உள்பட மாநில-மாவட்ட நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக அண்ணாமலை பேசியதாவது:-

சாதனையும், சோதனையும்...

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தேர்தல் வாக்குறுதிகளை அளித்து மக்களை நம்பவைத்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. பெட்ரோல்-டீசல் வரியை 2 முறை மத்திய அரசு குறைத்திருக்கிறது. ஆனால் பெட்ரோல்-டீசல் விலையை குறைப்பதாக வாக்குறுதி தந்துவிட்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க. என்ன செய்தது?.

பிரதமர் நரேந்திரமோடியின் 8 ஆண்டு ஆட்சியின் சாதனைகளையும், தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சியின் சோதனைகளையும் மக்கள் பார்த்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

ஊழல் பட்டியல் வெளியிடுவோம்

இந்த அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. இன்னும் 2 வருடங்கள் நாம் பொறுத்துத்தான் ஆகவேண்டும். தமிழகத்தில் கஞ்சா பொருட்கள் நடமாட்டம், படுகொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் அரசு கவனம் செலுத்தாதது ஏன்?. இன்னும் 4 நாட்களில் 2 ஊழல் பட்டியலை தமிழக பா.ஜ.க. வெளியிட போகிறது. தி.மு.க.வின் விஞ்ஞான ஊழலை வெளிக்காட்ட உள்ளோம்.

பிரதமரை மேடையில் அமர வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அதை கேட்பதற்கு மக்கள் தயாராக இல்லை. கச்சத்தீவை கருவாடு விற்றது போல தாரை வார்த்தது தி.மு.க.வும், காங்கிரசும்தான். இப்போது பா.ஜ.க. களத்தில் இறங்கி இருக்கிறது என்பதற்காக விற்ற கருவாட்டை திரும்ப வாங்க தி.மு.க. நினைக்கிறது. கச்சத்தீவை கனவில் கூட தி.மு.க.வால் மீட்க முடியாது. அதற்கான அருகதையும் தி.மு.க.வுக்கு கிடையாது. ஆனால் பா.ஜ.க. அரசு அதை செய்துகாட்டும்.

பா.ஜ.க.வின் அரசியல் எழுச்சி

பிரதமர் முன்னிலையில் மு.க.ஸ்டாலின் நிதி விவரங்கள் தொடர்பாக பேசியவை அனைத்தும் தவறு. இந்த தவறுக்கு காரணம் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

தமிழகத்தில் தற்போது பா.ஜ.க.வின் அரசியல் எழுச்சி நடந்து வருகிறது. தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் இன்னும் 20 நாட்களில் மாவட்டந்தோறும் உண்ணாவிரதம் நடைபெறும். 30 நாட்களுக்கு பிறகு திருச்சியில் மாபெரும் பேரணி நடைபெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தடுத்து நிறுத்திய போலீசார்

இதனைத்தொடர்ந்து அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க.வினர் கோட்டையை நோக்கி கோஷங்கள் எழுப்பியபடியே பேரணியாக சென்றனர். அப்போது தடுப்புகள் அமைத்து காத்திருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவே அண்ணாமலை தலைமையிலான பா.ஜ.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஆட்டோவில் ஏறிச்சென்ற அண்ணாமலை

பேரணியில் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கலைந்து போக செய்தனர். ஆனாலும் அண்ணாமலை வந்த பாதையிலேயே திரும்ப நடந்து சென்றார். அவருக்கு பின்னாலேயே பா.ஜ.க.வினரும் ஊர்வலமாக கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர். இதனால் வேறுவழியாக கோட்டையை நோக்கி பா.ஜ.க.வினர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. போலீசாரும் மிகவும் உஷாராக கோட்டைக்கு செல்லும் அனைத்து வழித்தடங்களையும் தடுப்புகள் கொண்டு அடைத்திருந்தனர்.

ஒருகட்டத்தில் பா.ஜ.க.வினர் அண்ணாமலையை சூழ்ந்து கொண்டனர். இந்தநிலையில் எதிர்பாராத வகையில் அண்ணாமலை அந்தவழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி, அதில் ஏறி சென்றார். அவருடன் 2 பேரும் சென்றனர். காந்தி இர்வின் சாலையை தாண்டி ஆட்டோவை நிறுத்தி, அதன்பின்னர் அங்கிருந்து தனது காரில் அண்ணாமலை கமலாலயம் சென்றார். அங்கு முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்பு புறப்பட்டார்.


Next Story