'தி.மு.க. ஆட்சியில் மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லை'


தி.மு.க. ஆட்சியில் மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லை
x

‘தி.மு.க. ஆட்சியில் மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லை’ என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசினார்.

திண்டுக்கல்

கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், தமிழக அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்து பழனியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பஸ்நிலைய ரவுண்டானா பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், மாவட்ட பொருளாளர் வேணுகோபாலு, பழனி சட்டமன்ற தொகுதி நிர்வாகி ரவிமனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், வளர்ச்சிக்கு தடையாக இருந்த துரோகிகள் வெளியேற்றப்பட்டு விட்டார்கள். எனவே இனி அ.தி.மு.க.வின் வளர்ச்சி செழிக்கும். வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்கும். ரவுடி கும்பலை வைத்து அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் புகுந்து சேதப்படுத்தியவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அவர்களுக்கு எந்நாளும் கட்சியில் இடமில்லை.

விடியாத அரசு

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி, விடியாத அரசாக உள்ளது. கடந்த தேர்தலின்போது சாத்தியமில்லாத பொய்யான வாக்குறுதிகளை அளித்துவிட்டு, அதை நிறைவேற்ற முடியாமல் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மக்களை திசை திருப்பி வருகிறார்கள். குறிப்பாக பெண்களுக்கு உரிமைத்தொகை, கல்விக்கடன் ரத்து, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் திட்டம் ஆகியவை பற்றி எவ்வித பேச்சும் இல்லை.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட அம்மா கிளினிக், தாலிக்கு தங்கம் திட்டம், திருமண உதவித்தொகை என பல்வேறு நல்ல திட்டங்களை நிறுத்தி விட்டனர். இதனால், ஓராண்டு காலத்துக்குள்ளேயே நடப்பது, மக்கள் விரோத அரசு என்பதை அனைவரும் தெளிவாக புரிந்து கொண்டார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. மக்கள் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லை. விலைவாசி விண்ணை முட்டுகிறது. மக்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ள நிலையில் மின்கட்டண உயர்வு என்பது முற்றிலும் தவறு.

பொருளாதார வளர்ச்சி பாதிப்பு

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில், மின்கட்டணத்தை உயர்த்துவது பற்றி பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் ஆகியோரிடம் கருத்துகேட்பு நடைபெறும். ஆனால் அவ்வாறு எதுவும் இல்லாமல் அரசு தன்னிச்சையாக மின்கட்டண உயர்வை அறிவித்து இருப்பது கண்டிக்கத்தக்கது. இதனால் சிறுதொழில் நலிவடையும், பொருளாதார வளர்ச்சி பாதிக்கும். தமிழகம் பின்னோக்கி செல்லும். எனவே மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story