நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாரா?
நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாரா? என அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார்.
ஆர்ப்பாட்டம்
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய கோரியும், ஊழல் முறைகேடுகள், சட்டம்-ஒழுங்கு தொடர்பாக தி.மு.க. அரசை கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- இந்த தி.மு.க. ஆட்சி முடிய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆட்சியை கலைத்து விட்டு வருகிற நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாரா?. நாங்கள் தயாராக இருக்கிறோம். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் இரட்டை இலை சின்னம் உடையும் அளவிற்கு பொத்தானை மக்கள் அமுக்கி வாக்களிப்பார்கள்.
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி
காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தை கொண்டு வந்ததை முடக்கி ஆமை வேகத்தில் பணிகள் நடைபெறுகிறது. அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றிருந்தால் இன்றைக்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தண்ணீர் வந்திருக்கும். வரக்கூடிய தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
காப்பீடு திட்டத்தில் சிகிச்சை
அதன்பின் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறுகையில், ``செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்காமல் தி.மு.க. அரசு முட்டுக்கொடுத்திருக்கிறது. இதனை விட்டுவிட்டு மக்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டும். 15 மாதங்களில் பன்னோக்கு மருத்துவமனை கட்டுமான பணியை முடித்து திறந்து உள்ளோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருக்கிறார். அதற்கென சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை. 11 மாதங்களில் ரூ.350 கோடியில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை நாங்கள் திறந்தோம். தமிழகத்தில் 2-வது பல் மருத்துவக்கல்லூரியை கொண்டு வந்ததை 2 வருடங்களாக திறக்கவில்லை. செந்தில்பாலாஜிக்குரிய சிகிச்சை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிப்பதில் காப்பீடு அனுமதி கிடைக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சைகளை நிறுத்தி வைப்பதை தவிர்க்க வேண்டும்'' என்றார்.