தி.மு.க. கவுன்சிலரின் கணவருக்கு அரிவாள் வெட்டு
குஜிலியம்பாறையில் தி.மு.க. கவுன்சிலரின் கணவரை அரிவாளால் வெட்டிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.
தி.மு.க. கவுன்சிலர்
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன் (வயது 45). இவர், குஜிலியம்பாறை பஸ்நிலையம் அருகே போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். மேலும் இவர், பாளையம் பேரூர் தி.மு.க. முன்னாள் துணை செயலாளராக இருந்தவர். அவருடைய மனைவி மஞ்சுளா. இவர், பாளையம் பேரூராட்சி 8-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் தாமரைக்கண்ணன் போட்டோ ஸ்டுடியோவுக்குள் அமர்ந்து வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஸ்டுடியோவுக்குள் புகுந்த முதியவர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தாமரைக்கண்ணனை வெட்ட பாய்ந்தார்.
சரமாரி அரிவாள் வெட்டு
இதனையடுத்து தாமரைக்கண்ணன் தடுக்க முயன்றபோது, கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர் அவர், அந்த அரிவாளை பிடுங்கி வெளியே வீசினார். ஆனால் அந்த முதியவர் தான் மறைத்து வைத்திருந்த மற்றொரு அரிவாளை எடுத்து மீண்டும் தாமரைக்கண்ணன் மீது கொலைவெறியுடன் சரமாரியாக வெட்டினார்.
இதில் அவருக்கு தலை, கழுத்து, காது, கை உள்ளிட்ட இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயங்களுடன் ரத்தம் சொட்ட, சொட்ட தாமரைக்கண்ணன் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அலறினார். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து முதியவரை மடக்கி பிடித்தனர்.
தீவிர சிகிச்சை
இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு உயிருக்கு போராடி கொண்டிருந்த தாமரைக்கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே முதியவரை பிடித்து குஜிலியம்பாறை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலையை சேர்ந்த சுப்பு லட்சுமண முத்தரசன் (70) என்பது தெரியவந்தது.
ஜாமீனுக்கு உதவியதால்...
தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல் ெவளியானது. அதில் கடந்த ஜூன் மாதம் 24-ந்தேதி குஜிலியம்பாறை அருகே உள்ள மணியக்காரன்பட்டியில், தனது மகள் பாக்கியலட்சுமி, கணவர் சந்தனத்துரையுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக சந்தனத்துரை மற்றும் அவரது தாயார் கோவிந்தம்மாள் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் சந்தனத்துரை கடந்த ஆகஸ்டு மாதம் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.
சந்தனத்துரை ஜாமீனில் வந்ததற்கு தாமரைக்கண்ணன் தான் உதவியாக இருந்துள்ளார் என்று நினைத்து சுப்பு லட்சுமண முத்தரசன், தாமரைக்கண்ணன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளார். இதற்காக ஸ்டுடியோவுக்கு வெளியே அவர் நீண்ட நேரம் சாலையில் காத்திருந்திருந்து தாமரைக்கண்ணனை வெட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.
கைது-அரிவாள்கள் பறிமுதல்
இதனையடுத்து சுப்பு லட்சுமண முத்தரசனிடம் இருந்து 2 அரிவாள்கள், ஒரு இரும்பு கம்பி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து தாமரைக்கண்ணன் அளித்த புகாரின் பேரில் குஜிலியம்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து சுப்பு லட்சுமண முத்தரசனை கைது செய்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.