தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க தி.மு.க. சார்பில் நாளை மறுநாள் சமூகநீதி கருத்தரங்கு
தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க தி.மு.க. சார்பில் சமூகநீதி கருத்தரங்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது. இந்த கருத்தரங்கில் தேசிய, மாநில தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
சென்னை,
அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஆளும்கட்சியான பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.
பா.ஜ.க.வை எதிர்த்து வலுவான கூட்டணியை உருவாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதன் ஆரம்பகட்டமாக அவரது பிறந்த நாளான மார்ச் 1-ந் தேதி சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனகார்கே உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்கேற்றனர்.
சமூகநீதி கருத்தரங்கு
அடுத்தகட்டமாக சமூகநீதி கருத்தரங்கு மூலம் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பா.ஜ.க. ஆட்சியில் சமூக நீதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில் தற்போது சமூக நீதியை முன்னெடுத்து செல்வது குறித்த கருத்தரங்கு மூலம் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராகும் வகையில் இந்த கருத்தரங்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாளை மறுநாள் நடக்கிறது
பா.ஜ.க. அல்லாத மற்ற அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களை ஒருங்கிணைத்து இந்த கருத்தரங்கு நடைபெற உள்ளது.
இதில் நேரடியாக பங்கேற்க முடியாத தேசிய, மாநில தலைவர்கள் காணொலி மூலம் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கருத்தரங்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடியே, 'இந்தியாவை சமூகநீதியை முன்னோக்கி கொண்டு செல்வது' என்ற தலைப்பில் பேசுகிறார்.
இதில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா, பாரதிய ராஷ்டிரிய சமீதி மூத்த தலைவர் கேசவராவ், ஆம்ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரைன், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திர சேகர ராவ் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.
காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பு
காங்கிரஸ் கட்சிக்கும் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை பா.ஜ.க.வுக்கு எதிரான அணியில் இணையாத ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனால் பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்து சஸ்மித் பாத்ரா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் இருந்து சுரேஷ் ஆகியோரும் இந்த கருத்தரங்கில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
இன்று இறுதி செய்யப்படும்
இதுகுறித்து தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், 'இந்தியாவில் சமூக நீதியை முன்னெடுத்து செல்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் தேசிய அளவிலான தலைவர்களுடன் உரையாற்ற உள்ளார்.
நாட்டில் ஒருமித்த எண்ணம் கொண்ட அரசியல் கட்சிகள் மற்றும் ஓ.பி.சி. அசோசியேஷன் தலைவர்களும் இதில் பங்கேற்க உள்ளனர். எனவே இதில் யார்-யார் பங்கேற்று பேசுகிறார்கள், அவர்களில் யாரெல்லாம் நேரடியாகவும், காணொலி மூலமாகவும் பங்கேற்கிறார்கள் என்பது இன்று (சனிக்கிழமை) இறுதி செய்யப்பட்டு விடும். தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ், கம்யூனிஸ்டு தலைவர்கள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்' என்று தெரிவித்தார்.