அரசு ஒப்பந்த பணிக்கு மணல் எடுத்த தி.மு.க. நிர்வாகியை வழிமறித்து தாக்குதல்
பேரணாம்பட்டு அருகே அரசு ஒப்பந்த பணிக்கு மணல் எடுத்த தி.மு.க.நிர்வாகியை வழிமறித்து 4 பேர் பயங்கரமாக தாக்கினர். அவர்களை கைது செய்யக்கோரி குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க.நிர்வாகி மீது தாக்குதல்
பேரணாம்பட்டு அருகே உள்ள பண்டல தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 48). தி.மு.க. ஒன்றிய அவைத் தலைவரான இவர் அரசு ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார். நேற்று காலை குண்டலப்பல்லி கானாற்றுக்கு சென்று தான் செய்து வரும் அரசு ஒப்பந்த பணிகளுக்காக தனது டிராக்டர் மூலம் மணல் எடுப்பதை பார்த்து விட்டு பைக்கில் குண்டலப் பல்லி கிராமத்திலிருந்து தனது கிராமத்தை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது குண்டலப் பல்லி கிராமத்தை சேர்ந்த குட்டி என்கிற ஜெயராமன், கள்ளிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கபில் மற்றும் 2 ேபர் சேர்ந்து கொண்டு அவரை வழிமறித்து நீ மட்டும் எப்படி மணல் எடுக்கலாம், நாங்கள் மணல் எடுத்தால் போலீசில் புகார் செய்யுற, எங்கள் டிராக்டர்கள் எல்லாம் போலீசில் உள்ளது என கூறி தகாத வார்த்தைகளால் திட்டினர். அப்போது 4 பேரும் இரும்பு காப்பு, இரும்பு கம்பி ஆகியவற்றால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் பலத்த காயம் அடைந்த சீனிவாசன் பேரணாம்பட்டு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
முற்றுகை
சீனிவாசனை தாக்கிய நபர்களை கைது செய்யக்கோரி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சுமார் 15 நிமிடம் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் சப்- இன்ஸ்பெக்டர் தேவபிரசாத் மற்றும் போலீசார் சென்று பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர் இதனை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பேரணாம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவபிரசாத் வழக்குப்பதிவு செய்து குட்டி என்ற ஜெயராமன், கபில் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்.