மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி தி.மு.க. பிரமுகர் பலி
புகழூர் 4 ரோடு அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி தி.மு.க. பிரமுகர் பலியானார். இதையடுத்து டிரைவர் கைது செய்யப்பட்டார்.
மோட்டார் சைக்கிள் மோதல்
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள முனியநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 60). தி.மு.க. மேற்கு ஒன்றிய கிளை செயலாளராக இருந்தார். மேலும் இவர் அப்குதியில் சொந்தமாக மளிகை கடையும் நடத்தி வந்தார். இந்நிலையில் மனோகரன் தனது மோட்டார் சைக்கிளில் புகழூர் நான்கு ரோடு பகுதிக்கு வந்து, பொருட்களை வாங்கி விட்டு மீண்டும் வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே சாலையில் எதிரே கடம்பன்குறிச்சி பகுதியை சேர்ந்த லோகநாதன் (56) என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக மனோகரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
பலி- டிரைவர் கைது
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மனோகரன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மனோகரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து மனோகரனின் மனைவி வாசுகி கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவர் லோகநாதனை கைது செய்தனர். மேலும் டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டன.