'தி.மு.க. எப்போது ஆட்சிக்கு வந்தாலும் தமிழகம் வளர்ச்சி பெறும்'- திருமங்கலம் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
தி.மு.க. எப்போது ஆட்சிக்கு வந்தாலும் தமிழகம் வளர்ச்சி பெறும் என்று திருமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
திருமங்கலம்
தி.மு.க. எப்போது ஆட்சிக்கு வந்தாலும் தமிழகம் வளர்ச்சி பெறும் என்று திருமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
தி.மு.க. பொதுக்கூட்டம்
மதுரை தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மதுரை திருமங்கலம் கலைஞர் திடலில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக அரசின் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு., பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, மாவட்ட கவுன்சிலர் கிருத்திகா தங்கபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்தி, தனபாண்டி, மதன்குமார், சண்முகம், பாண்டியன், நகரச்செயலாளர் ஸ்ரீதர், நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் அதியமான் மற்றும் தி.மு.க. தெற்கு மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-
தமிழகம் வளர்ச்சி பெறும்
தி.மு.க அரசு யானை பலம் கொண்டது. தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகம் வளர்ச்சி அடையும். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணிற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி. மதுரை-திண்டுக்கல் புறவழிச்சாலை திருப்பரங்குன்றம் சாலையில் மேயர் முத்து மேம்பாலம், ரூ.120 கோடியில் நூலகம் ஆகியவற்றை தி.மு.க. கொண்டு வந்தது.
கடந்த 10 ஆண்டுகளில் முன்னாள் அமைச்சர் பெயருக்கு திட்டங்களை அறிவித்திருந்தார். ஆனால் திருமங்கலம் ரெயில்வே மேம்பாலம் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. ரெயில்வே மேம்பாலம் திட்டத்தை ரூ.78 கோடி கொண்டு வந்தவர் உங்கள் மாவட்ட செயலாளர் தான். விரைவில் திருமங்கலம் ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெறும்.
திருமங்கலம் பஸ் நிலையம் அமைக்கவும் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த 2 திட்டங்களும் திருமங்கலம் மக்களின் எதிர்பார்த்தபடி நிறைவேற்றப்படும்.
பா.ஜனதா வளராது
தமிழகத்தில் இன்றைக்கு 2 கோடியே 20 லட்சம் ரேஷன் கார்டு உள்ளது. அவர்களுக்கு இல்லம் தேடி மருத்துவம் கொடுத்தவர் மு.க.ஸ்டாலின். சமஸ்கிருதம் படித்து இருந்தால் தான் மருத்துவத்தில் பணியாற்ற முடியும் என்ற விதிமுறையை உடைத்தெறிந்தது தான் தி.மு.க. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை கொண்டுவந்தவர் முதல்-அமைச்சர். இன்று பா.ஜனதா தமிழகத்தில் வளர்ந்து கொண்டு இருக்கிறது என்று கூறுகிறார்கள். அண்ணாவும், கருணாநிதியும் வாழ்ந்த தமிழகத்தில் பா.ஜனதா வளர முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
முடிவில் திருமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கபாண்டியன் நன்றி கூறினார்.