எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு தி.மு.க. அரசின் திட்டமிட்ட சதி
எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு தி.மு.க. அரசின் திட்டமிட்ட சதி என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
பரமக்குடி,
எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு தி.மு.க. அரசின் திட்டமிட்ட சதி என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
நலத்திட்ட உதவிகள்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எஸ்.கொடிக்குளம் கிராமத்தில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வேளச்சேரி அசோக் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கருணை இல்லம் அர்ப்பணிப்பு விழா நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெண்களுக்கு இலவச வேட்டி-சேலைகளை வழங்கி அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இது தி.மு.க.விற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. மதுரை மண்ணில் எனது இல்ல திருமணத்தின் போது வந்த இந்த தீர்ப்பு பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1½ கோடி தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வரவேண்டும் என விரும்புகின்றனர். அதை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றோம்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நடந்தது தேர்தலே அல்ல. அரசியல் வரலாற்றில் இது போன்ற ஒரு தேர்தலை பார்த்தது இல்லை. ஜனநாயக முறைப்படி நேர்மையாக நாளைக்கு தேர்தல் நடந்தால் கூட 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். ஈரோடு இடைத்தேர்தலில் எதற்கும் ஆசைப்படாமல் எதுவும் வாங்காமல் 50 ஆயிரம் பேர் இரட்டை இலைக்கு வாக்களித்துள்ளனர்.
திட்டமிட்ட சதி
எடப்பாடி பழனிசாமி சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் தி.மு.க. ஆட்சி அவலங்களை எடுத்துரைத்தார். அதனால் தான் சிவகங்கையில் நடந்த கூட்டத்திற்கு மதுரை விமான நிலைய பஸ்சில் வரும்போது அடையாளம் தெரியாத நபர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசுகிறார். அதை கேட்டுக் கொண்டும் அவர் பொறுமை காத்தார். அவருடன் வந்த காவலர்கள் அந்த நபரை பிடித்து அங்கிருந்த காவல்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அந்த நிகழ்வை திட்டமிட்டு சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். நாங்கள் கொடுத்த புகாரின் படி நடவடிக்கை எடுக்காமல் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தி.மு.க. அரசின் திட்டமிட்ட சதியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் முத்தையா, சதன் பிரபாகர், பரமக்குடி நகர் செயலாளர் ஜமால், பரமக்குடி ஒன்றிய அவைத்தலைவர் உரப்புளி நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.