'நீட்' தேர்வு ரத்தாகும் வரை தி.மு.க.வின் சட்ட போராட்டம் தொடரும்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
‘நீட்’ தேர்வு ரத்தாகும் வரை தி.மு.க.வின் சட்ட போராட்டம் தொடரும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
அரியலூர்,
அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பல்வேறு மருத்துவ சேவைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் விழா நேற்று நடந்தது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 5 தளங்களை கொண்ட 700 படுக்கை வசதிகளுடன் கூடிய பல்வேறு மருத்துவ சேவைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்தார். பின்னர் அவர் ஆஸ்பத்திரியின் புறநோயாளிகள் பிரிவினை தொடங்கி வைத்து, அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதையடுத்து விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
'நீட்' தேர்வு ரகசியம்
நான் தேர்தல் பிரசாரத்தில் 'நீட்' தேர்வு ரகசியம் என்று குறிப்பிட்டதை, தற்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அது என்ன? என்று ஒவ்வொரு மேடைகளிலும் விமர்சித்து வருகிறார். நான் தேர்தல் பிரசாரத்தில் கூறியது போலவே, சட்டமன்றத்தில் நான் பேசிய முதல் கன்னிப்பேச்சில் 'நீட்' தேர்வை எதிர்த்து போராடி உயிரை மாய்த்துக்கொண்ட அனிதாவின் பெயரில் அரங்கம் அமைக்க வேண்டும் என்று பேசினேன்.
தற்போது தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின்படி அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு சகோதரி அனிதாவின் பெயர் சூட்டப்படுகிறது. இதை பார்க்கும்போதெல்லாம் 'நீட்' தேர்வுக்காக நாம் போராடுவது நினைவிற்கு வரும். அண்மையில் பிரதமரை சந்தித்தபோது நான் முதலில் வைத்த கோரிக்கை 'நீட்' தேர்வு ரத்து என்பதுதான். அதற்கு பிரதமர் மோடி நீட் தேர்வு தேவைக்கான அவசியங்களை எடுத்து கூறினார்.
சட்ட போராட்டம் தொடரும்
ஆனால் நான் மற்றும் தமிழகத்தில் மாணவர்கள் 'நீட்' தேர்வை ஏற்கவில்லை. 'நீட்' தேர்வை ரத்து செய்யும் வரை சட்ட போராட்டத்தினை தி.மு.க. தொடரும் என்று கூறிவிட்டு வந்துள்ளேன். 'நீட்' தேர்வு ரத்தாகும் வரை தி.மு.க. சார்பில் சட்ட போராட் டம் தொடரும் என்பது எனது 'நீட்' தேர்வின் ரகசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
அனிதா நினைவு அரங்கம்
அதனை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரியலூர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு 'அனிதா நினைவு அரங்கம்' என்று பெயர் பொறித்த பலகையினை திறந்து வைத்து, அரங்கினை பார்வையிட்டார்.
அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவம் பயிலும் 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டு அரசு பள்ளி மாணவர்கள் 10 பேருக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், ஆய்வக உபகரணங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கினார். மேலும் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 2,539 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியே 68 லட்சத்து 55 ஆயிரத்து 250 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொல்.திருமாவளவன் எம்.பி. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.