11 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி
குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த வழக்கில் 11 பேரிடம் டி.என்.ஏ. ரத்த பரிசோதனை செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி அளித்து புதுக்கோட்டை மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
குடிநீர் தொட்டியில் அசுத்தம்
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த டிசம்பர் 26-ந் தேதி அசுத்தம் கலக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சட்டம்-ஒழுங்கு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 4 மாதங்களாக விசாரணை நடத்தி வந்தனர். இதில் போலீசார் 147 பேரிடம் இதுவரை விசாரணை செய்து சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர். 4 மாதங்கள் ஆகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை உரிய முறையில் விசாரணை செய்வதற்கு ஒரு நபர் குழுவை அமைத்து அதற்கு ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை நடத்த அறிவித்தது.
டி.என்.ஏ. பரிசோதனை
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தங்களுடைய விசாரணையில், 11 பேரை சந்தேகப்படுவதாகவும், அவர்களுடைய டி.என்.ஏ.வை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அதற்கு நீதிமன்றம் உத்தரவு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து மாவட்ட பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி சத்யா, சி.பி.சி.ஐ.டி. கோரிக்கையை ஏற்று 11 பேரின் டி.என்.ஏ.வை பரிசோதனை செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டார். இந்த நிலையில் சிறப்பு மருத்துவர்கள் குழு மூலம் இன்னும் இரு தினங்களில் 11 பேரிடமும் டி.என்.ஏ. ரத்த பரிசோதனை செய்யப்படும் என்று சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.