பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்பும்போது அளவு குறைகிறதா?
பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்பும்போது அளவு குறைகிறதா? என வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கார், பைக்குகளுக்கு பெட்ரோல் நிரப்பச் செல்பவர்கள் சில குறிப்பிட்ட பங்குகளுக்கு செல்வதைப் பார்த்து இருக்கிறோம். அவர்களிடம் அதுபற்றிக் கேட்டால், அந்த பெட்ரோல் பங்கில்தான் அளவு சரியாக இருக்கும். பெட்ரோல் சுத்தமாக இருக்கும். கூடுதல் கிலோ மீட்டர் கிடைக்கும் என்றெல்லாம் சொல்வது உண்டு. அது சரியாக இருக்குமா? பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் போது, அளவு வேறுபடுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றனவா?
இதுபோன்ற சந்தேகங்களுக்கு பெட்ரோல் பங்கு ஊழியர், எண்ணெய் நிறுவன அதிகாரி, வாகன ஓட்டிகள், வாடிக்கையாளர் போன்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அவர்கள் தெரிவித்த கருத்து விவரம் வருமாறு:-
குறைய வாய்ப்பில்லை
ஆமத்தூரை ேசர்ந்த பெட்ரோல் பங்கு மேலாளர் வெங்கடேசன்:-
தற்போது பெட்ரோல் நிறுவனங்கள் மிகுந்த கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல், டீசல் வினியோகிக்கும் போது எவ்வித அளவு குறைவோ, மற்ற குறைபாடுகளோ இருக்க வாய்ப்பில்லை. எலக்ட்ரானிக் முறையில் அனைத்து அளவுகளும் மேற்கொள்ளப்படும் நிலையில் அளவுகள் குறைய வாய்ப்பில்லை.
அவ்வாறு வாடிக்கையாளர் நினைத்தாலும் எங்களிடம் தொழிலாளர் நலத்துறையால் சீலிடப்பட்ட அளவுகள் உள்ளன. அதை வைத்து அளவுகளை சரி பார்த்துக் கொள்ளலாம்.
எலக்ட்ரானிக் முறை
இந்தியன் ஆயில் நிறுவனம் விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் வம்சிகிருஷ்ணா:-
வழக்கமாக பெட்ரோல், டீசல் குறைவு புகார்களை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம். ஆனால் கடந்த காலங்களில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் வினியோகம் மெக்கானிக்கல் முறையிலான பம்புகள் மூலம் வினியோகிக்கப்பட்டு வந்தது. அதில் சில மாற்றங்கள் செய்தால் 1 லிட்டர் பெட்ரோலுக்கு 950 முதல் 980 மி.லி. பெட்ரோல் டெலிவரி ஆக வாய்ப்புள்ளது. ஆனால் தற்போது எலக்ட்ரானிக் முறை வந்துவிட்டது.
ஆதலால் இந்த மாற்றத்திற்கு வாய்ப்பு இல்லை. மேலும் பெட்ரோல் பம்புகளில் ஏதேனும் மாற்றம் செய்தால் அது மதுரையில் உள்ள தலைமை நிறுவனத்திற்கு தெரிய வாய்ப்பு உள்ளது. எனவே பெட்ரோல், டீசல் வினியோக அளவு மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும் மற்றொரு புகார் பெட்ரோல், டீசலில் கலப்படம் செய்வதாக கூறப்படுவது. தற்போதைய நிலையில் மதுரையில் இருந்து பெட்ரோல் ஏற்றிய லாரி எந்த பெட்ரோல் பங்கிற்கு செல்கிறதோ அதுவரை அந்த லாரியில் உள்ள பெட்ரோல் டேங்கர் சீலிடப்பட்டிருக்கும். குறிப்பிட்ட பெட்ரோல் பங்க் வந்த பின்பு தான் அந்த பெட்ரோல் பங்க் பொறுப்பாளருக்கு ஒரு ஓ.டி.பி. எண் வந்த பின்பு அவர் பெட்ரோல் டேங்கரை திறக்க முடியும். மேலும் பெட்ரோல் பங்கில் உள்ள பெட்ரோல் டேங்கில் ஏதேனும் கலப்படம் செய்தால் அதுவும் தலைமை நிறுவனத்திற்கு தெரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே தற்போதைய நிலையில் பெட்ரோல், டீசல் அளவு, தரம் ஆகியவற்றில் எந்த தவறும் நடக்க வாய்ப்பில்லை.
கண்காணிப்பு
வெம்பக்கோட்டையை சேர்ந்த சத்யா:-
பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் போட செல்லும்போது வேலைக்கு செல்ல வேண்டும் என அவசரம், அவசரமாக செல்வதால் பெட்ரோல் போடும் போது சில சமயங்களில் அளவுகளை கண்காணிக்க முடிவதில்லை. ஒரு சில பெட்ரோல் பங்குகளில் அளவு குறைகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. அவ்வாறு இருந்தால் முறையான கண்காணிப்பு வேண்டும்.
கலப்பட புகாா்
பந்தல்குடியை சேர்ந்த பெட்ரோல் பங்கு ஊழியர் டேவிட்:-
பங்குகளில் பெட்ரோல், டீசல் போடுவதற்கு முன்னர் வாகன ஓட்டிகளிடம் மீட்டரில் சைபர் இருப்பதை சரி பார்க்க சொல்வோம். தற்போது நவீன எந்திரம் மூலம் துல்லியமான அளவில் டீசல், பெட்ரோல் போடப்படுகிறது.
பெட்ரோல், டீசல் போட வரும் வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் நடந்து கொள்கிறோம். பெட்ரோல், டீசல் போட்ட பிறகு தொகையை காட்டுகிறோம் மொத்தத்தில் பெட்ரோல், டீசல் அளவு குறைவு, கலப்படம் என்ற புகாருக்கு இடம் இல்லை.
வெளிப்படைத்தன்மை
ஆலங்குளம் பெட்ரோல் பங்கு உரிமையாளர் ராம்குமார் சவுந்தரராஜன்:- தற்போது தானியங்கி மூலமாக பெட்ரோல், டீசல் வினியோகம் செய்வதால் எவ்வித குறைபாடும் கண்டிப்பாக இருக்காது. அவ்வாறு எதாவது அளவுகளில் மாறுபாடு ஏற்பட்டால் எந்திரம் பழுதாகி விடும். அவற்றை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தான் சரி செய்ய முடியும். அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் வெளிப்படைத்தன்மையுடன் பெட்ரோல், டீசல் வினியோகம் செய்யப்படுகிறது.
நடவடிக்கை
விருதுநகரை சேர்ந்த வணிகர் குமரவேல் ராஜன்:- நான் வழக்கமாக ஒரு சில பெட்ரோல் பங்குகளில் மட்டும் பெட்ரோல் போடுவது வழக்கம். ஆனால் அங்கு அளவு குறைவதை தெரிந்து அங்குள்ள ஊழியர்களிடம் கேட்டால் அவர்கள் முறையாக பதில் சொல்லாததோடு அவர்கள் பதிலே வித்தியாசமாக இருந்தது. எனவே வீண் பிரச்சினை தேவையில்லை என கருதி பெட்ரோல் பங்கினை மாற்றி விட்டேன். பெட்ரோல் நிறுவனங்கள் பெட்ரோல் பங்குகளில் தவறுகள் நடப்பதை முறையாக கண்காணித்து அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
ரூ.50-க்கு பெட்ரோல்
தாயில்பட்டி பவுன்நகர் மும்தாஜ்:- 5 ஆண்டுகளுக்கு முன்பு 1 லிட்டர் அல்லது 3 லிட்டர் என பெட்ரோல் போடுவோம். ஆனால் தற்போது பெட்ரோல் விலை அதிகரித்து விட்டதால் ரூ.50 அல்லது ரூ.100-க்கு தான் பெட்ரோல் போடுகிறோம். அதிலும் ஒரு சில இடங்களில் குறைபாடு இருக்க தான் செய்கிறது. அவற்றை கண்காணித்து முறைப்படுத்த வேண்டும். பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு செல்வதால் அளவை குறைந்து போட கூடாது.
முறையான பயிற்சி
எலக்ட்ரீசியன் விருதுநகர் ராஜ்குமார்:-
தினசரி பல்வேறு பகுதிகளில் வேலை செய்ய வேண்டிய நிலையில் பயணிக்கும் இருசக்கர வாகனத்திற்கு பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் போடுவது வழக்கம். ஆனால் ஒரு சில பங்குகளில் பெட்ரோல் அளவு குறித்து ஏதேனும் விவரம் கேட்டால் முறையான பதில் கிடைப்பது இல்லை.
ஒருவருக்கு குறிப்பிட்ட தொகைக்கு பெட்ரோல் போடுவதற்கு பெட்ரோல் போடும் எந்திரத்தில் தொகையை நிர்ணயித்து விட்டு அடுத்து நாம் சொல்லும் தொகைக்கு தொடர்ந்து நமக்கு பெட்ரோல் போடும் போது நிச்சயமாக அளவில் வேறுபாடு வர வாய்ப்புள்ளது. எனவே ஊழியர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து முறையான பயிற்சி அளித்து முறையாக பெட்ரோல் போடும் நடைமுறையை பின்பற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.
நேர்மை
ஸ்ரீவில்லிபுத்தூர் முத்துக்கிருஷ்ணன்:- ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் சரியான அளவில் பெட்ரோல், டீசல் வினியோகம் செய்யப்படுகிறது. கலப்படம் இல்லாததால் கி.மீ. நன்கு கிடைக்கிறது. எந்த பணி செய்தாலும் நேர்மையாகவும், வௌிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். அப்போது தான் தொழிலில் முன்னேற்றம் காண முடியும்.
ஹெல்ெமட் அணிந்தால் பெட்ரோல்
ராஜபாளையம் கல்லூரி பேராசிரியர் முருகானந்தம்:- பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் அளவு சரியாக போடுவதில்லை. ஒரு சில இடங்களில் ஊழியர்கள் பெட்ரோல் அளவு சரியாக போட்டாலும் மைலேஜ் அளவு ஒரே மாதிரியாக கிடைப்பதில்லை. அதற்குக் காரணம் ஊழியர்கள் விரைவில் பெட்ரோல் பம்பை அழுத்தி முடிக்கின்றனர். பெட்ரோல் பம்பை பெட்ரோல் டேங்க்கில் இருந்து எடுக்கும் பொழுது கவனமாக பார்த்து எடுப்பதில்லை.
பெட்ரோல் துளி மேலே படும்படி செய்கின்றனர். இன்னும் ஒரு சில பங்குகளில் ஹெல்மெட் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும் என்றும் ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறார்கள்.
நூதன முறை
முடுக்கன்குளத்தை சேர்ந்த டிரைவர் தர்ம சாஸ்தா:- காரியாபட்டி தாலுகா பகுதிகளில் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு சென்று வருகிறேன். எங்கள் பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் போட்டு வருகிறோம். பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் முடிந்த வரை அளவீடு துல்லியமாக இருந்து வருகிறது. ஆனால் ஒரு சில இடங்களில் முறையாக பெட்ரோல், டீசல் போடுவது இல்லை. மீட்டர்களில் நூதன முறையில் ஏமாற்றி வருகின்றனர். இதனால் கார் டிரைவர்கள் ஏமாற்றப்படுகின்றனர்.
எந்திரம் தவறு செய்யாது
தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர் சங்க தலைவர் கே.பி.முரளி கூறும்போது, 'அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவுப்படி 'ஆட்டோ மெஷின்' என்று அழைக்கப்படும் எண்ணெய் நிறுவனங்களின் தலைமை அலுவலகத்துடன் இணைக்கும் வகையில் செயல்படும் தானியங்கி எந்திரம் கொண்ட பம்புகள் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 5 ஆயிரத்து 800 பங்குகளில் 80 முதல் 90 சதவீதம் பங்குகளில் இதுபோன்ற தானியங்கி எந்திரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.
எந்திரம் தவறு செய்யாது. சரியான அளவில் பெட்ரோல் போடவில்லை என்று உணரும் வாடிக்கையாளர்கள் பெட்ரோல் பங்கு மேலாளரிடம் சென்று தொழிலாளர் துறை பரிசோதித்து வழங்கி உள்ள 5 லிட்டர் கேனில் எரிபொருள் நிரப்பி அளவை உறுதி செய்து காண்பிக்கச் சொல்லலாம். பெட்ரோல் போட்டுவிட்டு கூகுள்பே மூலம் பணம் செலுத்தும் போது, செலுத்தப்பட்ட நேரத்தை துல்லியமாக கூறினால் அதனை தானியங்கி எந்திரம் மூலம் சரியான அளவில் பெட்ரோல் போடப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்க முடியும். அதேபோல் தானியங்கி எந்திரத்தில் ரூ.200-க்கு பெட்ரோல் போடுவதாக டைப் செய்துவிட்டு, வாகனத்தில் ரூ.100-க்கு மட்டும் எரிபொருள் வழங்கிவிட்டு, இணைப்பை துண்டித்தால் தானியங்கி எந்திரம் பழுதாகிவிடும். அதற்கு பிறகு எண்ணெய் நிறுவன அதிகாரிகள்தான் பழுதை சரிசெய்ய முடியும். வெளிப்படை தன்மையுடன் நடக்க வேண்டும் என்பதற்காக பெட்ரோல் பங்கு வளாகத்தில் கண்காணிப்பு கேமரா, தானியங்கி எந்திரத்தில் கேமரா மற்றும் குரல் பதிவு கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. தவறை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன'.
எண்ணெய் நிறுவனம் மறுப்பு
இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறும் போது, 'எண்ணெய் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு எரிபொருள் தரமாகவும், அளவு எப்போதும் சரியான முறையிலும் வழங்கப்பட வேண்டும் என்று பெட்ரோல் சில்லறை விற்பனையாளர்களுக்கு அடிக்கடி அறிவுறுத்தி வருகிறோம். இதில் எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை. இதற்காக அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் தானியங்கி எந்திரம் பொருத்தப்பட்டு, அவை அனைத்தும் இந்திய எண்ணெய் நிறுவன அலுவலகத்துடன் இணைக்கப்பட்டு உள்ளன.
குறிப்பிட்ட தொகையை பதிவு செய்துவிட்டு அதைவிட குறைவான அளவு எரிபொருள் வழங்கினால் எந்திரம் இணைப்பு துண்டிப்பாகி, அடுத்த வாடிக்கையாளருக்கு எரிபொருள் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படும். பிறகு எண்ணெய் நிறுவன அதிகாரிகள்தான் துண்டிக்கப்பட்ட இணைப்பைச் சரி செய்ய முடியும் என்பதால் தவறுக்கு வாய்ப்பு இல்லை. அதேபோல் பெட்ரோல் போடுவதற்கு முன்பு மீட்டரில் சைபர் என்று இருப்பதை பார்த்து கொள்ள வேண்டும். எரிபொருள் நிரப்பப்பட்ட உடன் நாம் வழங்கிய தொகைக்கு எரிபொருள் வழங்கியதை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும். இதற்காக அவ்வப்போது எண்ணெய் நிறுவன அதிகாரிகள் திடீர் சோதனை செய்து தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகிறார்கள். வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்க விரும்பினால் இந்திய எண்ணெய் நிறுவன முகநூல் பக்கம், டுவிட்டர், 'MoPNG E Seva' என்ற இணையதள முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம்'. இவ்வாறு அவர்கள் கூறினர்.