மணல் குவாரிகள் அமைக்க அனுமதி அளிக்க கூடாது


மணல் குவாரிகள் அமைக்க அனுமதி அளிக்க கூடாது
x

திருக்கடையூரில் மணல் குவாரிகள் அமைக்க அனுமதி அளிக்க கூடாது என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை


மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கூடலாறு, மஞ்சளாறு பாசன சாகுபடியாளர்கள் சங்க தலைவர் அருள்தாஸ் தலைமையில் விவசாயிகள் மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர், காழியப்பநல்லூர், மாணிக்கப்பங்கு, பிள்ளைபெருமாநல்லூர், ஆணைகோவில், சிங்கானோடை போன்ற கிராமங்கள் கடற்கரையில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. இந்த கிராமங்களில் நெல், நிலக்கடலை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. வளமான இந்த பகுதியில் இயற்கையாகவே ஆற்றுமணல், சவுடு மணல் போன்ற கனிம வளங்கள் கிடைக்கின்றன. இங்கு சிலர் மணல் குவாரி அமைத்து மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் செயல்களில் ஈடுபடுகிறாா்கள். ஏற்கனவே சில இடங்களில் மணல் குவாரிகள் அமைக்கப்பட்டு பின்னர் மக்கள் போராட்டம் காரணமாக மணல் எடுப்பதை கைவிட்டு சென்றனர். மணல் எடுக்கப்பட்ட பகுதிகளில் மிகவும் ஆழமாக உள்ளதால் அங்கு கடல் நீர் உட்புகுந்து உவர் நீராக மாறிவிட்டது. இதனால் விவசாயம் படிப்படியாக பாதிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் மீண்டும் அந்த பகுதியில் மணல் குவாரி அமைத்தால் முழுமையாக விவசாயம் பாதிக்கப்படுவதோடு, குடிநீர் கிடைப்பதே அரிதாகி விடும். எனவே மேற்கண்ட பகுதியில் மணல் குவாரி அமைக்க அனுமதி அளிக்க கூடாது.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் லலிதா உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story