அறிமுகம் இல்லாதவர்கள் உணவு, பண உதவி கேட்டால் வீட்டுக்குள் அனுமதிக்க கூடாதுபொதுமக்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை


அறிமுகம் இல்லாதவர்கள் உணவு, பண உதவி கேட்டால் வீட்டுக்குள் அனுமதிக்க கூடாதுபொதுமக்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
x
தினத்தந்தி 23 Dec 2022 12:15 AM IST (Updated: 23 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

அறிமுகம் இல்லாத நபர்கள் உணவு, பண உதவி கேட்டால் வீட்டுக்குள் அனுமதிக்க கூடாது என பொதுமக்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் அறிவுறுத்தியுள்ளார்.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருக்கும் வயதானவர்களை குறி வைத்து மர்ம ஆசாமிகள் மோசடி சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் பெண்ணாடம் அருகே மாளிகை கோட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் ஒரு பெண் தனக்கு பசிப்பதாகவும், உணவு தருமாறும் கூறியுள்ளார். அதை நம்பி சப்பாத்தி கொடுத்த மூதாட்டியிடம் அந்த பெண் நகையை பறித்துச் சென்று விட்டார். உடனே அப்பகுதி மக்கள் அந்த பெண்ணையும், அவருடன் வந்தவரையும் பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கிராம பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வயதானவர்கள் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். உணவு, பண உதவி கேட்டோ, லோன் தருவதாக கூறிக்கொண்டோ, நகை பாலிஷ் போட்டு தருவதாகவும், ஜோதிடர் போல் தோஷம் கழிப்பதாக கூறி கொண்டு வரும் முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் வந்தால் அவர்களை வீட்டின் உள்ளே அனுமதிக்க கூடாது.

சந்தேக நபர்கள்

மேலும் தங்களது கிராம பகுதிகளில் இது போன்று சந்தேக நபர்கள் யாரேனும் சுற்றிதிரிவது பற்றி அறிந்தால் உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவசர காவல் உதவி எண் 100, கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இயங்கி வரும் முதியோர்களின் பாதுகாப்பிற்கான ஹலோ சீனியர் 82200 09557, பெண்களின் பாதுகாப்பிற்கு லேடீஸ் பர்ஸ்ட் 82200 06082 காவல் உதவி எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தால், போலீசார் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாப்பு பணி மேற்கொள்வார்கள். மேலும் எவ்வித குற்ற சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க முடியும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story