ரேஷன்கடைகளில் சோப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கும்படி கட்டாயப்படுத்த கூடாது -அமைச்சர் உத்தரவு


ரேஷன்கடைகளில் சோப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கும்படி கட்டாயப்படுத்த கூடாது -அமைச்சர் உத்தரவு
x

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக ரேஷன்கடைகளில் சோப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கும்படி கட்டாயப்படுத்த கூடாது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி உத்தரவிட்டார்.

திண்டுக்கல்,

தமிழகம் முழுவதும் ரேஷன்கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் சோப்பு, உப்பு, மஞ்சள்தூள் உள்ளிட்ட இதர பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் ரேஷன்பொருட்களை வாங்கும் மக்களை சோப்பு உள்ளிட்ட இதர பொருட்களை வாங்கும்படி கட்டாயப்படுத்துவதாக பல பகுதிகளில் மக்கள் குற்றம் சாட்டினர்.

அந்த மக்களின் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தும் வகையில், அது தொடர்பான செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் வெளியானது. இதற்கிடையே 'தினத்தந்தி' செய்தியின் எதிரொலியாக ரேஷன்கடைகளில் சோப்பு உள்ளிட்ட இதர பொருட்களை வாங்கும்படி கட்டாயப்படுத்தக்கூடாது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி உத்தரவிட்டார்.

கட்டாயப்படுத்த கூடாது

திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன்கோட்டையில் நேற்று நடைபெற்ற ரேஷன்கடை திறப்பு விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

கடந்த ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகையை கேட்டு தற்போது ஏராளமானோர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரேஷன்கடைகளில் சோப்பு உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றை விருப்பம் உள்ளவர்கள் வாங்கி பயன்பெறலாம்.

அதேநேரம் அந்த பொருட்களை வாங்கும்படி மக்களை கட்டாயப்படுத்த கூடாது. அவ்வாறு பொருட்களை வாங்கும்படி மக்களை கட்டாயப்படுத்தும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அனைத்து ரேஷன்கடைகளுக்கும் புதிய கட்டிடம் கட்டப்படும். தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் ரேஷன்கார்டுகளின் எண்ணிக்கையை பொறுத்து முழுநேர, பகுதிநேர ரேஷன்கடைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு இவர் பேசினார்.


Next Story