புதிய காற்றழுத்த தாழ்வு நிலை எதிரொலி: மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது மீன்வளத்துறை அதிகாரி உத்தரவு
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை எதிரொலியால் கடலூா் மாவட்ட மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளாா்.
கடலூர் முதுநகர்,
காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக் கடலில் நேற்று காலை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக தமிழக வங்கக் கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவுவதோடு, மணிக்கு 45 முதல் 65 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:-
கடலுக்கு செல்லக்கூடாது
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் பைபர், விசைப்படகுகள் மூலம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். மேலும் ஏற்கனவே கடலில் தங்கி மீன் பிடித்துக் கொண்டிருக்கும் விசைப்படகு மீனவர்களும், அருகில் உள்ள துறைமுகங்களுக்கு பாதுகாப்பாக கரை திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது தவிர நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் தங்களது படகு மற்றும் மீன்பிடி வலைகள், இதர உபகரணங்களை, பாதுகாப்பான இடங்களில் வைப்பதோடு, அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.