ரேஷன் கடைகளுக்கு செல்ல வேண்டாம்:மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பம் -டோக்கன் வீடு, வீடாக வழங்கப்படும்கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தகவல்
மகளிர் உரிமை திட்ட விண்ணப்பம் பெற ரேஷன் கடைக்கு பெண்கள் செல்ல வேண்டாம் என்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமை திட்ட விண்ணப்பம் பெற ரேஷன் கடைக்கு பெண்கள் செல்ல வேண்டாம் என்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
விண்ணப்பம் -டோக்கன்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு, ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆவண காப்பக ஆணையாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா முன்னிலை வகித்தார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்தநாளான வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதி கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பம் மற்றும் டோக்கன் வருகிற 20-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை ரேஷன் கடை விற்பனையாளரால் வீடு வீடாக வழங்கப்பட உள்ளது. விண்ணப்பம்பெற பொதுமக்கள் ரேஷன் கடைக்கு வரவேண்டிய அவசியம் இல்லை.
7½ லட்சம் ரேஷன் கார்டுகள்
ஈரோடு மாவட்டத்தில் 1,207 ரேஷன் கடைகளில் உள்ள 7 லட்சத்து 67 ஆயிரத்து 316 ரேஷன்கார்டுதாரர்களுக்கு, மகளிர் உரிமைத்திட்டத்திற்கான விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்வது தொடர்பான முகாம் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதல் கட்டமாக 639 ரேஷன் கடைகளுக்குட்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு 586 இடங்களில் வருகிற 24-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி வரையும், 2-வது கட்டமாக 568 ரேஷன் கடைகளுக்குட்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு 544 இடங்களில் ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையும் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற உள்ளது.
இந்த பணியில் இல்லம்தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்கள் 2 ஆயிரத்து 183 பேரும், முகாம் பொறுப்பு அலுவலர்கள் 1,130 பேரும், மண்டல அலுவலர்கள் 341 பேரும், மேற்பார்வை அலுவலர்கள் 113 பேரும், மாவட்ட அளவிலான 10 மேற்பார்வை அலுவலர்களும் என மொத்தம் 3 ஆயிரத்து 777 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கு 2 கட்டங்களாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளன.
ஆவணங்கள்
குடும்பத்தலைவி, தகுதி உள்ள பெண் பயனாளிகள் விண்ணப்ப முகாமில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் மின் கட்டண ரசீது உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை வழங்கலாம்.
இவ்வாறு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், கூடுதல் கலெக்டர் நாரணவ்ரே மனிஷ் சங்கர்ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.