மருத்துவ படிப்பில் 'நெக்ஸ்ட்' தகுதித்தேர்வை மத்திய அரசு திணிக்கக்கூடாது


மருத்துவ படிப்பில் நெக்ஸ்ட் தகுதித்தேர்வை மத்திய அரசு திணிக்கக்கூடாது
x
தினத்தந்தி 4 July 2023 3:12 AM IST (Updated: 4 July 2023 4:06 PM IST)
t-max-icont-min-icon

மருத்துவ படிப்பில் 'நெக்ஸ்ட்' தகுதித்தேர்வை மத்திய அரசு திணிக்கக்கூடாது என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறினார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

மருத்துவ படிப்பில் 'நெக்ஸ்ட்' தகுதித்தேர்வை மத்திய அரசு திணிக்கக்கூடாது என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறினார்.

'நெக்ஸ்ட்' தேர்வு

தஞ்சையில் 'நெக்ஸ்ட்' தேர்வை கைவிடக்கோரி நடந்த கருத்தரங்கத்தில் பங்கேற்ற சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் நிருபர்களிடம் கூறியதாவது:-மத்திய அரசு 'நெக்ஸ்ட்' என்ற தகுதித்தேர்வை மருத்துவ படிப்பில் திணிக்கிறது. இந்த தகுதித் தேர்வை மத்திய அரசு திணிக்கக்கூடாது என்றும், இத்தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் பிரதமருக்கு தமிழக முதல்-அமைச்சர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

இதை மனமார வரவேற்கிறோம்.'நெக்ஸ்ட்' நுழைவுத் தேர்வை முழுமையாக ரத்து செய்வதற்கு தமிழக அரசு அடுத்தகட்டமாக எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கமும், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கமும் உறுதுணையாக இருக்கும்.

பாதிப்பை ஏற்படுத்தும்

'நெக்ஸ்ட்' நுழைவுத் தேர்வு மிகப்பெரிய பாதிப்பை மாணவர்களுக்கு ஏற்படுத்தும். போட்டி தேர்வையும், தகுதி தேர்வையும் ஒன்றாக இணைப்பது சரியல்ல. வேறு எந்த நாட்டிலும் இப்படியொரு முறை இல்லை. எம்.பி.பி.எஸ். இறுதியாண்டில் தகுதி பெறுவதற்கான தேர்வை நடத்துவது மாநில அரசின் மருத்துவ பல்கலைக்கழகம்தான் நடத்தும்.இந்த நிலையில் எம்.பி.பி.எஸ். இறுதியாண்டில் தேர்ச்சி பெறுவதற்கும், முதுநிலை பட்டப்படிப்பில் சேருவதற்கும், வெளிநாட்டில் இருந்து படித்து வருபவர்களுக்கும் ஒரே தேர்வு என எல்லாவற்றையும் ஒன்றாக இணைப்பது என்பது மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும்.

கைவிட வேண்டும்

எம்.பி.பி.எஸ். படிப்பில் தேர்ச்சி பெறுவது என்பது வேறு. போட்டித் தேர்வு என்பது இடங்கள் குறைவாக இருக்கும். அதற்கு கடுமையான போட்டி இருக்கும். அதற்கு கடும் பயிற்சி அவசியம். அப்போது அதையும், இதையும் இணைக்கும்போது ஏராளமான பிரச்சினைகளையும், சிக்கல்களையும் உருவாக்கும்.இதில் ஏராளமானோர் தோல்வியடைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

இதனால் சாதாரண ஏழை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிப்பதற்கு வரமாட்டார்கள். எனவே, இரண்டையும் இணைப்பது என்பது சரியல்ல. இதன் காரணமாக இந்த 'நெக்ஸ்ட்' தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின்போது சங்க செயலர் சாந்தி மற்றும் மருத்துவ மாணவர் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story