சீன பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது கலெக்டர் அரவிந்த் அறிவிப்பு


சீன பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது  கலெக்டர் அரவிந்த் அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் சீன பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என்று கலெக்டர் அரவிந்த் அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் சீன பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என்று கலெக்டர் அரவிந்த் அறிவித்துள்ளார்.

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதே வேளையில் பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோயாளிகள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தனது 23-10-2018-ம் நாளிட்ட ஆணையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது.

விழிப்புணர்வு ஏற்படுத்த...

மேலும் சுப்ரீம் கோர்ட்டு தனது ஆணையில், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்துள்ளது.

அதைப்போல இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

மேலும் பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

சரவெடிகளை தவிர்க்க வேண்டும்

சுற்றுச்சூழலை பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை விவரம் வருமாறு:-

குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

பட்டாசு விற்பனை உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வருமாறு:-

புகை பிடிக்க கூடாது

பட்டாசு விற்பனை செய்யும் கடைகளில் பட்டாசு பொருட்களை தவிர மற்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது. பாதுகாப்புக்காக எந்நேரமும் ஈரச்சாக்குகள், தண்ணீர் மற்றும் மணல் வாளிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். புகைப்பிடிக்கக்கூடாது என்ற அறிவிப்பு பலகையை பொதுமக்கள் அறியும் வகையில் கடையில் வைப்பதோடு அருகில் யாரையும் புகைப்பிடிக்க அனுமதிக்கக் கூடாது. மின்தடை ஏற்படும் பட்சத்தில் மெழுகுவர்த்தி, எண்ணெய் விளக்குகள், தீக்குச்சிகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.

சீன பட்டாசுகளை விற்கக்கூடாது

டார்ச், பேட்டரி விளக்குகளை மட்டும் குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும். உதிரி பட்டாசுகளை விற்பனை செய்வதைத் தவிர்க்க வேண்டும். கடைகளை மூடும்போது அனைத்து மின் இணைப்புகளையும் துண்டித்த பின்னரே கடையை மூட வேண்டும். எளிதில் தீப்பற்றக் கூடிய பெயிண்ட், எண்ணெய் மற்றும் காகிதங்களை கடைகளிலோ அல்லது கடைகளின் அருகிலோ சேமித்தல் கூடாது. உரிமம் பெறப்பட்ட கட்டிடத்தில் மட்டுமே பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும். பட்டாசு, அதிர்வேட்டு போன்ற வெடிபொருட்களை உரிமம் பெறாத இடத்தில் தயார் செய்யக்கூடாது.

எக்காரணம் கொண்டும் ஓலையால் வேயப்பட்ட கூரையின் கீழ் பட்டாசு பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. சீன பட்டாசுகள் விற்பனை செய்யக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story