இரட்டை அர்த்த பாடல்களை பாடக்கூடாது: ஆபாச உடை அணிந்து கலைஞர்கள் கரகாட்டத்தில் பங்கேற்கக்கூடாது- மதுரை ஐகோர்ட்டு நிபந்தனை


இரட்டை அர்த்த பாடல்களை பாடக்கூடாது:  ஆபாச உடை அணிந்து கலைஞர்கள் கரகாட்டத்தில் பங்கேற்கக்கூடாது- மதுரை ஐகோர்ட்டு நிபந்தனை
x

ஆபாச உடை அணிந்து கலைஞர்கள் கரகாட்டத்தில் பங்கேற்கக்கூடாது என்று நிபந்தனை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


ஆபாச உடை அணிந்து கலைஞர்கள் கரகாட்டத்தில் பங்கேற்கக்கூடாது என்று நிபந்தனை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கரகாட்டத்துக்கு அனுமதி

மதுரை பேரையூர் பகுதியைச் சேர்ந்த மாரிசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "எங்கள் பகுதியில் எஸ்.மேலப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி வருகிற 8-ந்தேதி இரவு 8 மணி முதல் இரவு 11 மணி வரை கரகாட்டம் நடத்த அனுமதி வழங்கி, உரிய பாதுகாப்பையும் அளிக்க பேரையூர் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி சத்திகுமார் விசாரித்தார்.

அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மனுதாரர் கிராமத்தில் பிரச்சினைகளுக்கு இடமின்றி கரகாட்ட நிகழ்ச்சி நடத்தப்படும் என தெரிவித்தார்.

ஆபாச உடை கூடாது

பின்னர் அரசு வக்கீல் ஆஜராகி, "மனுதாரர் கிராமத்தில் கோவில் திருவிழாவிற்கு ஏற்கனவே ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. இந்த மனு, கரகாட்டம் நடத்த அனுமதி கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

* மனுதாரர் கிராமத்தில் கீழ்கண்ட நிபந்தனைகளுடன் அன்றிரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

* அதன்படி, கலைஞர்கள் ஆபாச உடை அணியாமல், நாகரிகமான உடைகளை உடுத்தி, ஆபாச வார்த்தைகளையோ, பாடல்களையோ, நடனமோ இல்லாமல் கரகாட்ட நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.

பிளக்ஸ் வைக்கக்கூடாது

* இரட்டை அர்த்தம் கொண்ட பாடல்களை பாடக்கூடாது.

* அரசியல், சாதி தொடர்பான பாடல்கள் இடம் பெறக்கூடாது.

* அரசியல், மதத்தலைவர்களுக்கு ஆதரவாக பிளக்ஸ் வைக்கக்கூடாது. நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் மது உள்ளிட்ட போதைப்பொருளை பயன்படுத்தக்கூடாது.

* விரும்பத்தகாத சம்பவம் நடந்தால் அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பு.

* நடன கலைஞர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

* நிபந்தனைகளை மீறினால் போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story