அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்கவில்லை என சமூகவலைதளங்களில் பரப்ப வேண்டாம்
அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்கவில்லை என சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம், தகுதி உள்ள அனைவருக்கும் கிடைக்கும் என்று கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசினார்.
அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்கவில்லை என சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம், தகுதி உள்ள அனைவருக்கும் கிடைக்கும் என்று கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசினார்.
கிராமசபை கூட்டம்
வேலூர் மாவட்டம் ஊசூர் அடுத்த சேக்கனூர் ஊராட்சியில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் மாலதி சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, வேலூர் சப்-கலெக்டர் பூங்கொடி, வேலூர் ஒன்றியக் குழு தலைவர் அமுதாஞானசேகரன், துணை தலைவர் மகேஸ்வரிகாசி, மாவட்ட கவுன்சிலர் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சென்ட்ரமேஷ்பாபு, ராஜன்பாபு, ஊராட்சி துணை தலைவர் ரமேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் பெருமாள் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினர்.
கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:-
பரப்ப வேண்டாம்
நாட்டின் முதுகெலும்பாக திகழ்வது கிராமங்கள் தான். எனவே கிராமங்கள் தன்னிறைவு பெற வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நல திட்டங்களை அறிவித்து அதனை கிராமங்களில் நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக குடிநீர், சாலை வசதி, அனைவருக்கும் வீடு வழங்குதல், இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து அதை நிறைவேற்றி வருகிறது. நல திட்ட உதவிகள் மற்றும் அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோரிடம் தெரிவித்து பயன்பெறலாம்.
தங்கள் கிராமத்துக்கு அடிப்படை வசதி கிடைக்கவில்லை என சமூக வலைதளங்களில் அதனை பரப்ப வேண்டாம். தகுதியுடைய அனைவருக்கும் கண்டிப்பாக அரசின் நல திட்டங்கள் கிடைக்கும். மேலும் அனைவருக்கும் குடிநீர் கிடைக்க மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் மாவட்டத்தில் ஒவ்வொரு வீதியாக கணக்கெடுத்து அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சாலைகளில் குப்பைகளை வீசாமல் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அதனை தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பார்வையிட்டனர்
முன்னதாக கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் சின்ன சேக்கனூர் ஏரியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் குளத்தை பார்வையிட்டதோடு, குளத்தில் தேங்கியுள்ள நீரில் மலர்தூவினர். தொடர்ந்து குளத்தின் கரையில் முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தேசிய கொடி கம்பத்தில், முன்னாள் ராணுவ அதிகாரி கொடி ஏற்ற கலெக்டர், எம்.எல்.ஏ. உள்ளிட்ட அதிகாரிகள் தேசியகொடி மரியாதை செலுத்தினர்.
சின்ன சேக்கனூர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட விழா மேடையை, எம்.எல்.ஏ. நந்தகுமார் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், வட்ட வழங்கல் அலுவலர் பழனி, ஊசூர் வருவாய் ஆய்வாளர் ரஜினிகாந்த், கிராம நிர்வாக அலுவலர் சங்கர்தயாளன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.