தமிழர்களின் பாரம்பரிய உடைகள் அணிவதில் ஈர்ப்பு இருக்கிறதா?
தமிழர்களின் பாரம்பரிய உடைகள் அணிவதில் ஈர்ப்பு இருக்கிறதா? என்பது குறித்து இளைய சமுதாயத்தினர் தெரிவித்த கருத்துகளை பார்கலாம்.
6-ந்தேதி சர்வதேச வேட்டி தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழர்களின் பாரம்பரிய உடைகள் அணிவதில் ஈர்ப்பு இருக்கிறதா என்பது குறித்து இளைய சமுதாயத்தினர் கருத்து த
நாம் அணியும் ஆடைகளே நமக்கு அடையாளம் தருகின்றன. நமது கலாசாரத்தைச் சொல்கின்றன.
தமிழர்கள் என்பதை வேட்டி, சட்டைகளே வெளிக்காட்டுகின்றன.
உலக பாரம்பரியங்களை பொக்கிஷமாக பாதுகாக்கும் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட 'யுனஸ்கோ' அமைப்பு தமிழர்களின் கலாசாரம், பண்பாடு, நாகரிகத்தை நன்கு உணர்ந்து வேட்டிக்கு உலக அங்கீகாரத்தை அளித்து இருக்கிறது.
சர்வதேச வேட்டி தினம்
2016-ம் ஆண்டு அந்த அமைப்புதான் ஜனவரி 6-ந்தேதியை சர்வதேச வேட்டி தினமாக அறிவித்தது.
அதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில் வேட்டி அணிய வேண்டும் என்ற உணர்வு இளைய தலைமுறையினரிடம் மேலோங்கி வருகிறது. அதற்காக யுனஸ்கோ அமைப்பை பாராட்ட வேண்டும்.
இதில் வேடிக்கை என்னவென்றால்? இங்கிலாந்துக்காரர் சொல்லி வேட்டி சட்டையை களைந்து விட்டு பேண்ட் சூட்டுக்கு மாறிய நாம், அமெரிக்காவில் உள்ள நிறுவனம் சொல்லித்தான் மீண்டும் வேட்டியை அணிய வேண்டியது இருக்கிறதே என்பதுதான்!
சரி போகட்டும்! எப்படியேனும் நமது பண்பாடு பாதுகாக்கப்படுவது நல்லதுதானே?
அன்றாட பணிக்கு பேண்ட்-சட்டையில் வரும் அரசு ஊழியர்கள் அன்றைய தினம் மட்டும் வேட்டி-சட்டையில் வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதே போன்று சர்வதேச வேட்டி தினத்தன்று மட்டும் கல்லூரி மாணவ-மாணவிகள் பாரம்பரிய உடைகள் அணிந்து வருவதற்கு கல்வி நிறுவனங்கள் பச்சைக்கொடி காட்டி இருக்கின்றன.
வேட்டி அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதோடு சர்வதேச வேட்டி தின கொண்டாட்டம் முடிந்து விடுகிறது. அப்புறம் அந்த வேட்டி, வீட்டு பிரோவின் ஓரத்தில் ஓய்வெடுக்கச் சென்று விடுகிறது.
எனவே சர்வதேச வேட்டி தினம் சம்பிரதாயத்திற்காக கடைப்பிடிக்கப்படுகிறதா? அல்லது இளைய தலைமுறையினரிடம் பாரம்பரிய ஆடைகள் அணிய வேண்டும் என்ற ஈர்ப்பை ஏற்படுத்துகிறதா? என்பது பற்றிய கருத்துகளை இதோ கீழே பதிவிட்டிருக்கிறார்கள் பாருங்களேன்:-
நாகரிக ஆடைகள்
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
ஐ.டி. நிறுவன ஊழியர் சுதாகர் (பழனி):- பொங்கல் பண்டிகை மற்றும் திருவிழாக்களின் போது வேட்டி-சட்டை அணிவது கம்பீரமாகவும், மனதுக்கு புதிய உற்சாகத்தையும் அளிக்கிறது. அதேநேரம் வேட்டியை தினமும் அணிய முடியவில்லை. அதேபோல் வேலை செய்யும் இடங்களுக்கு வேட்டி அணிந்து செல்வது வசதியாக இல்லை. அங்கு பேண்ட்-சட்டை அணிந்து செல்வதே ஏற்றதாக இருக்கிறது. இதுதவிர அன்றாட பணிகளை மேற்கொள்ளும் போதும் பேண்ட்-சட்டை அணிவதே நன்றாக இருக்கிறது.
பொறியியல் மாணவர் பரணிராஜா (நத்தம்):- நமது பாரம்பரியத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம். அதேநேரம் நாகரிக மாற்றத்துக்கு நானும் மாறிக் கொள்ள வேண்டும். எனவே பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது வேட்டி, சட்டை அணிவது நன்றாக இருக்கிறது. அதை தினமும் உடுத்துவது இயலாத காரியம். எனவே திருமணம் உள்ளிட்ட விழாக்களின் போது நாகரிக ஆடை அணிகிறேன். புத்தம், புதிய மாடல்களில் ஆடைகள் வரும்போது உடுத்தி கொள்ள ஆசை ஏற்படுவதால், நாகரிக ஆடைகளை தவிர்க்க முடியவில்லை.
விழாக்காலங்களில் பாரம்பரியம்
பொறியியல் மாணவர் முத்து இன்பகார்த்திக் (நத்தம்அசோக்நகர்):- இருசக்கர வாகனங்களில் அதிகமாக பயணிக்க வேண்டியது இருக்கிறது. அதுபோன்ற நேரத்தில் வேட்டி அணிவதை விட, பேண்ட் அணிந்து செல்வதே வசதியாக இருக்கிறது. இளம் வயதில் தான் நாகரிக ஆடைகளை அணிய முடியும். எனவே நாகரிக ஆடைகளை அதிகமாக அணிய நேரிடுகிறது. எனினும் கல்லூரி விழாக்கள், பொங்கல் பண்டிகை தினத்தில் பாரம்பரிய வேட்டி-சட்டை அணிவதை கடைபிடிக்கிறேன். வேட்டி-சட்டை அணியும் போது கம்பீரமாக தோன்றுவதை உணர முடிகிறது. எனினும் வேறுவழியின்றி நாகரிக ஆடைகளை தான் அதிகமாக அணிய நேரிடுகிறது.
கல்லூரி மாணவர் கருப்புசாமி (பித்தளைப்பட்டி):- இன்றைய காலகட்டத்தில் ஜீன்ஸ், காட்டன் பேண்ட்கள் ரெடிமேடாக கிடைக்கின்றன. 3 முதல் 4 நாட்கள் அணிந்தால் கூட பேண்ட் அழுக்கு தெரியாது. ஆனால் வேட்டியை பொறுத்தவரை ஒருநாள் கூட தாங்காமல் உடனே அழுக்காகிவிடும். மேலும் இளைய தலைமுறைக்கு வேட்டி கட்டுவதற்கு தெரியவில்லை. இதனால் ஒருசிலர் பாரம்பரியத்தை கடைபிடிக்கும் வகையில் ஒட்டிக்கோ, கட்டிக்கோ வேட்டிகளை அணிகின்றனர். ஆனால் பலர் வேட்டியை தவிர்த்து நாகரிக ஆடைகளை அணிகின்றனர். பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள், திருவிழாக்களில் பாரம்பரிய வேட்டி-சட்டையை அணிவதற்கு அனைவரும் முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.