தமிழர்களின் பாரம்பரிய உடைகள் அணிவதில் ஈர்ப்பு இருக்கிறதா?


தமிழர்களின் பாரம்பரிய உடைகள் அணிவதில் ஈர்ப்பு இருக்கிறதா? என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்

நாம் அணியும் ஆடைகளே நமக்கு அடையாளம் தருகின்றன. நமது கலாசாரத்தை சொல்கின்றன.

தமிழர்கள் என்பதை வேட்டி, சட்டைகளே வெளிக்காட்டுகின்றன. உலக பாரம்பரியங்களை பொக்கிஷமாக பாதுகாக்கும் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட 'யுனஸ்கோ' அமைப்பு தமிழர்களின் கலாசாரம், பண்பாடு, நாகரிகத்தை நன்கு உணர்ந்து வேட்டிக்கு உலக அங்கீகாரத்தை அளித்து இருக்கிறது.

இளைய தலைமுறை

2016-ம் ஆண்டு அந்த அமைப்புதான் ஜனவரி 6-ந்தேதியை சர்வதேச வேட்டி தினமாக அறிவித்தது.

அதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில் வேட்டி அணிய வேண்டும் என்ற உணர்வு இளைய தலைமுறையினரிடம் மேலோங்கி வருகிறது. அதற்காக யுனஸ்கோ அமைப்பை பாராட்ட வேண்டும்.

இதில் வேடிக்கை என்னவென்றால்? இங்கிலாந்துக்காரர் சொல்லி வேட்டி சட்டையை களைந்து விட்டு பேண்ட் சூட்டுக்கு மாறிய நாம், அமெரிக்காவில் உள்ள நிறுவனம் சொல்லித்தான் மீண்டும் வேட்டியை அணிய வேண்டியது இருக்கிறதே என்பதுதான்!

சரி போகட்டும்! எப்படியேனும் நமது பண்பாடு பாதுகாக்கப்படுவது நல்லதுதானே?

அன்றாட பணிக்கு பேண்ட்-சட்டையில் வரும் அரசு ஊழியர்கள் அன்றைய தினம் மட்டும் வேட்டி-சட்டையில் வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதேபோன்று சர்வதேச வேட்டி தினத்தன்று மட்டும் கல்லூரி மாணவ-மாணவிகள் பாரம்பரிய உடைகள் அணிந்து வருவதற்கு கல்வி நிறுவனங்கள் பச்சைக்கொடி காட்டி இருக்கின்றன.

பாரம்பரிய ஆடைகள்

வேட்டி அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதோடு சர்வதேச வேட்டி தின கொண்டாட்டம் முடிந்து விடுகிறது. அப்புறம் அந்த வேட்டி, வீட்டு பீரோவின் ஓரத்தில் ஓய்வெடுக்கச் சென்று விடுகிறது.

எனவே சர்வதேச வேட்டி தினம் சம்பிரதாயத்திற்காக கடைப்பிடிக்கப்படுகிறதா? அல்லது இளைய தலைமுறையினரிடம் பாரம்பரிய ஆடைகள் அணிய வேண்டும் என்ற ஈர்ப்பை ஏற்படுத்துகிறதா? என்பது பற்றிய கருத்துகளை இதோ கீழே பதிவிட்டிருக்கிறார்கள் பாருங்களேன்:-

புதிய ரக ஆடைகள்

வத்திராயிருப்பு கல்லூரி மாணவி நிர்மலா:-

நமது தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிவது படிப்படியாக குறைந்து கொண்டே செல்கிறது. பல்வேறு விதமான வடிவமைப்புகளில் ஆண்கள், பெண்களுக்கு என புதிய ரக ஆடைகள் வெளிவந்து கொண்டே இருக்கும்.

இந்த சூழ்நிலையில் நமது பாரம்பரிய ஆடைகளை மறக்கும் சூழ்நிலைக்கு இப்போதுள்ள இளைஞர்கள் உள்ளனர்.

நமது பாரம்பரிய ஆடைகளான வேட்டி, சேலையினை இந்த காலத்தில் உள்ள இளைஞர்கள் விரும்பி அணிய தொடங்கினாலே நமது பாரம்பரியம், கலாசாரம் உயர்ந்து விடும்.

முக்கிய விழாக்கள்

ராஜபாளையம் கல்லூரி மாணவர் சந்தோஷ்குமார்:-

வேட்டி என்பது தமிழரின் பாரம்பரிய உடையாக கருதப்படுகிறது. எங்களை போன்ற இளைஞர்களுக்கு வேட்டி அணிவது மகிழ்ச்சியை அளிக்கிறது. கோவில் திருவிழாக்கள், குடும்ப மற்றும் நண்பர்களின் திருமணங்கள் மற்றும் முக்கிய விழாக்களில் அனைவரும் சேர்ந்து ஒரே நிறத்தில் சட்டையும், வெள்ளை வேட்டியும் அணிந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறோம். அதோடு வேட்டி அணிந்து அனைவரும் ஒட்டுமொத்தமாக நின்று புகைப்படங்கள் எடுப்பதும், அது எக்காலத்திலும் நினைவு கூறத்தக்க வகையில் அமைந்துள்ளது. அதோடு இன்றைக்கு மிகப்பெரிய செல்வந்தர்கள், அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரை வேட்டி அணிந்து வருவது சமூகத்தில் ஒரு பெரும் மதிப்பை ஏற்படுத்துவதால் எங்களுக்கும் அவரைப்போன்று வேட்டி அணிந்து வருவது பெருமையாக உள்ளது.

தமிழரின் திருநாளான பொங்கல் போன்ற சிறப்பு நாட்களில் வேட்டி அணிந்து பொங்கல் கொண்டாடுவதே தனி ஸ்டைல் தான். திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் இல்லாமல் வாரத்தில் ஒரு நாள் கண்டிப்பாக கல்லூரி, அலுவலகங்களிலும் அனைவரும் வேட்டி அணிந்து வர வேண்டும் என கூறினால் நெசவாளர்களின் வாழ்க்கை சிறக்கும்.

ஒற்றுமையின் பாலம்

தாயில்பட்டி பச்சையாபுரம் கல்லூரி மாணவன் தீபன் ராஜா:-

கல்லூரிக்கு செல்லும் போது பல்வேறு வண்ணத்தில் பேண்ட் அணிந்தாலும் இன்னும் வேற வண்ணத்தில் அணிந்து இருக்காலாமோ என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆனால் வேட்டி அணியும் போது அந்த உணர்வு தோன்றுவதில்லை. அத்துடன் மாணவர்களின் ஒற்றுமைக்கு பாலமாக வேட்டி விளங்குகிறது.

சுப காரியங்களுக்கு செல்லும்போது மட்டும் தான் வேட்டியை தேடுகிறோம். அவ்வாறு இல்லாமல் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும், கல்லூரிகளில் ஒரு குறிப்பிட்ட நாளில் வேட்டிக்கு என்று தனி தினம் ஒதுக்க வேண்டும். வேட்டி ஆர்வம் இளைஞர்களிடத்தில் குறையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெசவாளர்களின் வாழ்க்கை

பாளையம்பட்டி சிலோன் காலனியை சேர்ந்த நெசவு தொழிலாளி பாப்புகுட்டி:-

தமிழர்களின் பாரம்பரிய உடையாக வேட்டி இருந்து வருகிறது. பழங்காலத்தில் திருமணம், கோவில் விழாக்கள், என அனைத்து இடங்களிலும் கண்டிப்பாக ஆண்கள் வேட்டி அணிவதை வழக்கமாக கொண்டு இருந்தனர். ஆனால் காலப்போக்கில் அது மறைந்து விட்டது. ஒரு சில திருமண வீட்டில் மணமகன் கூட முகூர்த்த நேரத்தில் மட்டும் அணிந்து விட்டு அடுத்த நிமிடமே பேண்ட் மாற்றும் நிலை தற்போது உருவாகி விட்டது.

அதிலும் குறிப்பாக இளைஞர்களிடத்தில் தற்போது வேட்டி அணியும் பழக்கம் மிகவும் குறைந்து விட்டது. கைத்தறி ஆடைகள் உடலுக்கு நல்லது. பாரம்பரிய மிக்க வேட்டி, சேலை அணிவதை தொடர்ந்தால் தான் நெசவாளர்களின் வாழ்க்கை சிறக்கும். வரும் காலங்களில் கல்லூரிகளிலும், அரசு அலுவலகங்களிலும் வாரம் ஒரு முறை வேட்டி அணிந்து வர வேண்டும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

ஊக்கப்படுத்த வேண்டும்

விருதுநகர் கல்லூரி மாணவர் ராகுல்:-

கல்லூரியில் வேட்டி அணிந்து செல்ல வேண்டும் என்பது என் போன்ற மாணவர்களுக்கு விருப்பம் தான். ஆனால் கல்லூரி நிர்வாகத்தினர் அதற்கு அனுமதி தராத நிலை உள்ளது.

மாணவிகளுக்கு சேலை அணிந்து வர அனுமதி அளிக்கும் நிலையில் மாணவர்களுக்கு ஏன் வேட்டியுடன் வர அனுமதி மறுக்கப்படுகிறது என தெரியவில்லை. எனவே கல்லூரிகளிலும் நிர்வாகத்தினர் மாணவர்கள் விருப்பப்பட்டால் வேட்டி அணிந்து வரலாம் என்ற விதிமுறையை அமலுக்கு கொண்டு வர வேண்டும்.

கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களை வேட்டி உடுத்தி வருவதற்கு ஊக்கமளிக்க வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழக பாரம்பரிய உடையான வேட்டி அணிவதை ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வேட்டி வாரம்

ஜனவரி 6-ந்தேதி சர்வதேச வேட்டி தினம் என்றாலும் தமிழ்நாட்டில் ஜனவரி 1-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை வேட்டி வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. வேட்டி விற்பனையை அதிகரிக்க ஜவுளி நிறுவனங்கள் கவர்ச்சிகர சலுகைகளை அறிவித்து உள்ளன.

இளைஞர்கள் சிரமமின்றி அணியும் வகையில் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டி, பாக்கெட் வைத்த வேட்டி என்று வேட்டியிலும் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன.

நாம் பாரம்பரிய உடைகளை தினமும் அணியாவிட்டாலும் கூட விழாக்காலங்களிலும் முடிந்தால் வாரத்தில் ஒரு தினமேனும் அணிவோம் என்றால் நெசவாளர்கள் மட்டும் அல்ல நமது கலாசாரமும் பாதுகாக்கப்படும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.


Next Story