தனிக்கட்சி தொடங்க தைரியம் இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் சவால்


தனிக்கட்சி தொடங்க தைரியம் இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் சவால்
x

வீதிக்கு வந்து தனிக்கட்சி நடத்த தைரியம் இருக்கிறதா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் சவால் விடுத்தார்.

சென்னை,

உண்மையான அ.தி.மு.க. யார்? என்ற சண்டை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடையே நீடித்து வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அவரது ஆதரவு மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், சென்னை வேப்பேரி ரிதர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜே.சி.டி.பிரபாகர், ராஜலட்சுமி மற்றும் நிர்வாகிகள் மருது அழகுராஜ், புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிரந்தர பொதுச்செயலாளர்

கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகுத்து தந்த சட்ட விதிகளின்படி 50 ஆண்டுகாலம் நிறைவு செய்த இந்த கட்சியில், சாதாரண தொண்டனாக இருப்பதே மிகப்பெரிய பெருமை என்ற நிலையும் உருவானது. ஆனால் இன்று இருக்கும் நிலையோ வேறு. ஒரு மனிதாபிமான அடிப்படை கூட இல்லாத, சர்வாதிகார உச்சியில் நின்றுகொண்டு, நான் சொல்வதுதான் சட்டம் என்ற நிலையை கொண்டுவர முயற்சி செய்து, அதில் தோற்றுப்போய், கட்சி, பொது மக்கள் செல்வாக்கை இழந்து நிற்கிறார், எடப்பாடி.

ஜெயலலிதா நிரந்தர பொதுச்செயலாளர் என்று பாசத்தோடு அழைத்து வந்தோம். தீர்மானங்களும் கொண்டுவந்து நிறைவேற்றினோம். எந்த நிலையிலும், எந்த காலகட்டத்திலும் இந்த தீர்மானத்தை ரத்து செய்த மாபாதகர்களை இந்த நாடு மன்னிக்காது. இன்றைக்கும் சொல்கிறோம், அ.தி.மு.க. பல நூறாண்டுகள் வாழும். ஆட்சி செய்யும். அதுவரை ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச்செயலாளர்.

மக்கள் குரல்

தி.மு.க.வில் மாவட்ட செயலாளர்கள் கூடி அப்போது எம்.ஜி.ஆரை நீக்கினார்கள். அந்த நிலை வரக்கூடாது என்று கருதிதான், அ.தி. மு.க.வை உருவாக்கிய பிறகு, அதற்கான தலைமை பொறுப்பை ஏற்பவர்கள், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால், தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற சட்ட விதியை எம்.ஜி.ஆர்.உருவாக்கினார். இந்த சட்ட விதியை யாராலும் திருத்தம் செய்யவோ, ரத்து செய்யவோ முடியாது என்ற சட்டத்தையும் அதில் சேர்த்தார்.

ஆனால் இன்று இடைக்கால பொதுச்செயலாளர் என்கிறார்கள். பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவோம் என்கிறார்கள். சாதாரண தொண்டனாகிய ஓ.பி.எஸ். இந்த இடத்துக்கு வரமுடியும் என்கிற சரித்திரத்தை உருவாக்கிய தலைவர்கள் கொண்டுவந்த சட்டத்தை தள்ளிவிட்டு, பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறவர்களை 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டுமாம்?. 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டுமாம்? எங்கே போய் கொண்டிருக்கிறது பாருங்கள். அதற்கு பணம் அதிகம் தேவைப்படும். அது இப்போது எடப்பாடி பழனிசாமி வசம் இருக்கிறது. அவர்கள் என்ன மணி (பணம்) அடித்தாலும், அவர்கள் 'பப்பு' வேகாது. இதுதான் மக்கள் குரல்.

உயிரே போனாலும்...

அ.தி.மு.க. சட்ட விதியில் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த அடிப்படை உறுப்பினர்களால்தான் கட்சியின் உச்சபட்ச பதவியை நிர்ணயம் செய்ய முடியும் என்ற அதிகாரம் இருக்கும். எங்கள் உயிரே போனாலும் அதைவிட மாட்டோம். ஒற்றுமையாக இருங்கள் என்று நாம் சொல்கிறோம். ஒற்றுமையாக இருக்கக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். அதுக்கு ஒரு சதவீதம்கூட வாய்ப்பு இல்லையாம்.

அப்படி என்றால், நீ (எடப்பாடி பழனிசாமி) தனிக்கட்சி வைத்து நடத்தி பார். உனக்கு தைரியம் இருந்தால், தனிக்கட்சியை நடத்தி பார். வீதிக்கு வா... வீதியில் வந்து நான் தனிக்கட்சி தொடங்க போகிறேன் என்று சொல்லிப்பார். எங்கே போய் விழுவாய் என்று உனக்கே தெரியாது. 50 ஆண்டுகாலம் ரத்தம் சிந்தி உழைத்த உழைப்பு. அதனை கபளீகரம் செய்ய நினைத்தால், அது நடக்காது.

எதிர்கால கனவு

கட்சி சட்டவிதிகளை காப்பாற்றுவதற்கு சுப்ரீம் கோர்ட்டில் நம்முடைய இயக்கம் நிற்கிறது. போராடுகிறோம். உறுதியாக நாம் வெற்றிபெறுவோம். நாளை இந்த இயக்கத்துக்கு தலைமை தாங்கக்கூடியவர்கள், அ.தி.மு.க.வின் தொண்டர்களாகத்தான் இருப்பார்கள். அந்த நிலையை நாங்கள் உருவாக்குவோம்.

அதேபோல், முதல்- அமைச்சராக வருபவரும் ஒரு தொண்டராகத்தான் இருப்பார். யார் என்ன செய்தாலும், அது அனைத்தையும் தவிடுபொடியாக்கி, தொண்டர்களின் துணையோடு, தமிழக மக்களின் ஆதரவோடு மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை நிறுவுவதே எதிர்கால கனவு. அதனை நனவாக்குவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story