தேசத்திற்கான கடமையை செய்ய வேண்டும்


தேசத்திற்கான கடமையை செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேசத்திற்கான கடமையை செய்ய வேண்டும் என்று முன்னாள் விங் கமாண்டர் ராகேஷ் ஷர்மா பேசினார்.

நீலகிரி

ஊட்டி,

தேசிய மாணவர் படை (என்.சி.சி.) மாணவிகளுக்கு மலையேற்ற பயிற்சி முகாம் நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்து வருகிறது. இதில் முதல் இந்திய விண்வெளி வீரரும், அசோக சக்ரா விருது பெற்றவருமான முன்னாள் விங் கமாண்டர் ராகேஷ் ஷர்மா கலந்துகொண்டார். அவர் மாணவிகளிடம் பேசியதாவது:-

கடந்த 75 ஆண்டுகளாக ராணுவம் சிறப்பாகவும், பொறுப்புடனும் செயல்பட்டு வருகிறது. ராணுவ பணியில் இருந்தாலும், பணி முடிந்து வெளியே வந்தாலும் அதற்கு எப்போதும் தனி மதிப்பு உள்ளது. மதிப்பெண்கள் மட்டும் வாழ்க்கை அல்ல. நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளில் கனவுகளை துரத்துவது மிகவும் முக்கியமானது. தொழில்நுட்ப உலகில் அறிவின் தேவை மிக முக்கியமானது. மரியாதையை சம்பாதிக்க வேண்டும். அது தேசத்திற்கான கடமையை செய்வதன் மூலம் கிடைக்கும். தற்போது பல நவீன தொழில்நுட்பங்கள் இந்தியாவில் இருக்கிறது. தற்போது இந்தியா நிகழ்த்தும் சாதனைகளை பார்த்து உலகமே வியந்து வருகிறது. எதிர்காலத்தில் தனியார் பங்களிப்புடன் சேர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் பெரிய முன்னேற்றங்கள் நடக்கும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக முகாம் கமாண்டன்ட் கர்னல் ஸ்ரீனிவாஸ் வரவேற்றார். முன்னாள் விங் கமாண்டர் ராகேஷ் ஷர்மாவுக்கு, கோவை குரூப் கமாண்டர் கர்னல் சிவராவ் நினைவு பரிசு வழங்கினார்.


Next Story