கடைகளில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த 'டாக் பே' வசதி:தபால் துறை அறிமுகம்
கடைகளில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த ‘டாக் பே' வசதியை தபால் துறை அறிமுகம் செய்துள்ளது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை
மத்திய அரசு 'டிஜிட்டல்' முறையிலான பணப்பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகிறது. அதன்படி பெரிய வணிக நிறுவனங்கள் முதல் சிறிய அளவிலான கடைகளில் கூட வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வசதியாக 'கியூஆர் கோடு' அட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. இதை தனியார் நிறுவனங்கள் வழங்குகின்றன.
இந்நிலையில் கடைகளில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வசதியாக 'டாக் பே' என்ற பெயரில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்காக 'கியூஆர் கோடு'களை தபால் துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
கியூஆர் கோடு
அதன்படி 'இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி' (ஐ.பி.பி.பி.) திட்டத்தின் கீழ் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கும் வியாபாரிகள், வாடிக்கையாளர்களிடம் பணம் பெற வசதியாக கியூஆர்கோடு அட்டை வழங்கப்படுகிறது. தேனி தபால் கோட்ட பகுதிகளில் தற்போது இந்த 'டாக் பே' வசதி அறிமுகம் செய்யப்பட்டு, அதற்கான கியூஆர் கோடு அட்டைகள் வழங்கும் பணி நடந்து வருகிறது.
இதுதொடர்பாக தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
தபால் துறை வழங்கும் இந்த 'டாக் பே' அட்டையின் மூலம் கடைகளில் வாடிக்கையாளர்களிடம் இருந்து டிஜிட்டல் முறையில் பணம் பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு பெறும் பணம் வியாபாரிகளின் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி சேமிப்பு கணக்கிற்கு வந்து விடும். அந்த பணத்தை தங்களின் தேவைக்கு ஏற்ப தங்கள் ஊரில் உள்ள தபால் அலுவலகத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.
சிறப்பு முகாம்
இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கியவர்கள் தங்களின் ஆதார் நகல், செல்போன் எண் ஆகியவற்றை மட்டும் கொடுத்து இந்த 'கியூஆர் கோடு' அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம். தபால் அலுவலகத்தில் கணக்கு இல்லாதவர்கள், உரிய ஆவணங்களை கொடுத்து கணக்கு தொடங்கிக் கொள்ளலாம். உடனே அவர்களுக்கு தபால் துறை அறிமுகப்படுத்தி உள்ள 'டாக் பே' என்ற கியூஆர் கோடு அட்டை வழங்கப்படும். அதற்கு கட்டணம் ஏதும் இல்லை.
இதற்காக சிறப்பு முகாம் அடுத்த மாதம் (மார்ச்) 31-ந் தேதி வரை தபால் அலுவலகங்களில் நடக்கிறது. வியாபாரிகள் கடையில் வைத்து உள்ள 'டாக் பே' என்ற கியூஆர் கோடை செல்போன் செயலியை ஸ்கேன் செய்து வாடிக்கையாளர்கள் எளிதாக பணம் செலுத்தலாம். மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் 100 பேருக்கு 'டாக் பே' கியூஆர் கோடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.