டாக்டரிடம் ரூ.2 லட்சம் மோசடி


டாக்டரிடம் ரூ.2 லட்சம் மோசடி
x

ராமநாதபுரம் டாக்டரிடம் வங்கி லிங்க் அனுப்பி ரூ.2 லட்சம் மோசடி செய்த நிலையில் சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்டு ஒப்படைத்தனர்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் டாக்டரிடம் வங்கி லிங்க் அனுப்பி ரூ.2 லட்சம் மோசடி செய்த நிலையில் சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்டு ஒப்படைத்தனர்.

டாக்டர்

ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டபிரபு (வயது28). ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார். 2 நாட்களுக்கு முன்னர் இவரின் செல்போன் எண்ணிற்கு அவரின் வங்கியில் இருந்து அனுப்புவது போன்று லிங்க் ஒன்று வந்துள்ளது. அதில் அவரின் வங்கி கணக்குடன் பான் கார்டு உள்ளிட்டவைகளை இணைக்குமாறு கூறப்பட்டு இருந்தது.

இதனை கண்ட டாக்டர் மணிகண்டபிரபு வங்கியில் இருந்து வந்திருந்ததாக தெரிந்ததால் அந்த லிங்க் இணைப்பை தொட்டபோது வங்கி செயலி போன்ற பக்கத்திற்குள் சென்றுள்ளது. அதில் அவரின் பான்கார்டினை பதிவு செய்து செயலாக்கம் செய்ய முயன்றபோது ரகசிய எண் வந்துள்ளது. அதனை பதிவு செய்தபோது 2 தவணைகளில் தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.2 லட்சம் பணம் எடுக்கப்பட்டு இருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதிர்ச்சி

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த டாக்டர் மணிகண்ட பிரபு உடனடியாக 1930 சைபர்கிரைம் போலீசின் இலவச எண்ணிற்கு அழைத்து தனது புகாரை பதிவு செய்துள்ளார். அவரின் புகார் பதிவு செய்யப்பட்ட நிலையில் ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டனர். இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் உடனடியாக அவரின் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தை பரிமாற்றம் செய்ய முடியாமல் தடை செய்தனர். மேலும் அந்த பணத்தினை சைபர்கிரைம் தேசிய நிலையம் மூலம் வங்கிகளுக்கு அறிவுறுத்தி பணத்தை தடுத்து நிறுத்தி உடனடியாக டாக்டரின் கணக்கிற்கு திரும்ப வழங்க நடவடிக்கை எடுத்தனர்.

1930 எண்

பணம் மோசடி செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் பணத்தினை திரும்ப பெறப்பட்டது. இதனை தொடர்ந்து பணத்தினை திரும்ப பெற்றதற்கான ஆவணத்தினை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை டாக்டர் மணிகண்டபிரபுவிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் உடன் இருந்தனர். ஆன்லைன் மோசடி, வங்கி லிங்க் இணைப்பு மோசடி இவ்வாறு மோசடி செயல் மூலம் பணம் எடுக்கப்பட்டால் உடனடியாக 1930 எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் செய்தால் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தினை திரும்ப பெற முடியும் என்பதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.


Next Story