மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது


மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது
x
திருப்பூர்


ஊத்துக்குளி அருகே மருந்தாளுனர் படிப்பு படித்துவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்ைச அளித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். கிளீனிக்கிற்கு 'சீல்' வைக்கப்பட்டது.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

போலி டாக்டர்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே திருப்பூர் சாலையில் உள்ள எஸ்.பெரியபாளையத்தில் போலி டாக்டர் ஒருவர் கிளீனிக் வைத்து நடத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை மருத்துவப்பணிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அருண்பாபு மற்றும் மகேஷ்குமார் தலைமையிலான டாக்டர்கள் அப்பகுதியில் செயல்பட்ட நல்லாண்டவர் கிளீனிக்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த கிளீனிக்கை ராஜா (வயது 44) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வந்ததும், மருந்தாளுனர் படிப்பு மட்டும் படித்த நிலையில் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததும், மருத்துவம் படித்து பதிவு செய்த டாக்டர்கள் பயன்படுத்தும் மருந்து, மாத்திரைகளை நோயாளிகளுக்கு வழங்கி சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது.

கைது

இதுகுறித்து விசாரணை நடத்தியபோது உரிய படிப்பை முடித்து சிகிச்சை அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் ஊசி மருந்துகள்கழிவுகளை தொற்று பரவும் வகையிலும், தமிழ்நாடு பயோ வேஸ்ட் மேனேஜ்மென்ட் சட்டப்படி கழிவுகளை அகற்றாமல் கையாண்டதும் தெரிய வந்தது. அதன் காரணமாக அந்த கிளீனிக் 'சீல்' வைத்து மூடப்பட்டது. மேலும் திருப்பூர் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கனகராணி முன்னிலையில் நடத்திய விசாரணையில் ராஜா, மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.

எனவே அவர் போலி டாக்டர் என்பது உறுதியானதால் ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் கனகராணி புகார் அளித்தார். அதன்பேரில் ஊத்துக்குளி போலீசார் போலி டாக்டர் ராஜா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஊத்துக்குளி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக போலி டாக்டர் ராஜா மருத்துவம் பார்த்து வந்தது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story