நெல்லையில் டாக்டர் மர்ம சாவு
நெல்லையில் டாக்டர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
நெல்லையில் டாக்டர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டாக்டர்
நெல்லை வண்ணார்பேட்டை பரணிநகரை சேர்ந்தவர் மணி. இவர் கோவில்பட்டியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி லீலாவதி. இவர் நெல்லை டவுனில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் பெங்களூருவில் வசித்து வருகிறார். 2-வது மகன் விக்னேஷ். டாக்டரான இவர் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு, சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.டி. படித்து வந்தார்.
மர்மசாவு
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மன அழுத்தம் காரணமாக சென்னையில் இருந்து விக்னேஷ் ஊருக்கு வந்துவிட்டார். அதன்பின்னர் அவர் சென்னைக்கு செல்லவில்லை.
நேற்று முன்தினம் விக்னேஷ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். மாலையில் லீலாவதி வேலையை முடித்து வீட்டிற்கு வந்து கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கவில்லை. பின்னர் தான் வைத்து இருந்த மற்றொரு சாவியின் மூலம் கதவை திறந்து உள்ளே சென்றார்.
அப்ேபாது, அங்கு விக்னேஷ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
இதுகுறித்து உடனடியாக பாளையங்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, விக்னேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் திருப்பதி வழக்குப்பதிவு செய்து, விக்னேஷ் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
நெல்லையில் டாக்டர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.