மாற்றுத்திறனாளிகள் முகாமில் பாதியில் சென்ற டாக்டர்கள்


மாற்றுத்திறனாளிகள் முகாமில் பாதியில் சென்ற டாக்டர்கள்
x

மேட்டுஇடையம்பட்டில் நடந்த மாற்றுத்திறனாளிகள் முகாமில் பாதியிலேயே டாக்டர் சென்றுவிட்டதால், அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

மேட்டுஇடையம்பட்டில் நடந்த மாற்றுத்திறனாளிகள் முகாமில் பாதியிலேயே டாக்டர் சென்றுவிட்டதால், அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

சிறப்பு முகாம்

வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அடுக்கம்பாறை ஊராட்சி, மேட்டு இடையம்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நரசிம்மன், ஊராட்சி மன்ற துணை தலைவர் தொன்போஸ்கோ, ஒன்றிய கவுன்சிலர் வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் கணேசன் வரவேற்றார். இதில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை, வங்கி கடன், தாட்கோ கடன், செயற்கை கால், புதிய தேசிய அடையாள அட்டை உள்ளிட்டவைகள் கேட்டு 90 பேர் மனு அளித்தனர்.

பாதியில் சென்ற டாக்டர்கள்

முதல் கட்டமாக 45 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்த முகாமில், மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்ய அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம், பொதுநலம் மற்றும் எலும்புத்துறை என தனித் தனியாக டாக்டர்கள் வந்திருந்தனர். மதியம் 12 மணி ஆனதும் சில டாக்டர்கள் ஒருவர் பின் ஒருவராக அங்கிருந்து கிளம்பி செல்ல தொடங்கினர்.

இதனைப் பார்த்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பிரதிநிதிகள் டாக்டர்கள் ஏன் பாதியிலேயே செல்கிறார்கள் என அதிகாரிகளிடத்தில் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் டாக்டர்கள் அங்கிருந்து சென்று விட்டதால் மாற்றுத்திறனாளிகள் சிலர் பயனடைய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இனிவரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கர், ரீனா வார்டு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வி, உமாசங்கர், பிரியதர்ஷினி, சாவித்திரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story