கோவில்களில் அன்னதானம் மனநிறைவை தருகிறதா?


கோவில்களில் அன்னதானம் மனநிறைவை தருகிறதா?
x
தினத்தந்தி 29 Oct 2022 12:15 AM IST (Updated: 29 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் வழங்கப்படும் அன்னதானம் மனநிறைவை தருகிறதா? என்று பக்தர்கள் கருத்து கேட்கப்பட்டது.

திண்டுக்கல்

ஒரு சாண் வயிற்றில் எழும் பசி எனும் தீயை அணைக்க அனைவரும் ஓடிக் கொண்டு இருக்கிறோம். உயிர்களின் முதல் தேவை உணவாகவே இருக்கிறது. இந்த உணவு எளிதாக யாருக்கும் கிடைத்து விடுவது இல்லை.

அன்னதானம்

கலியுகத்தில் மனிதன் போதும் என்று கூறுவது உணவை மட்டும் தான். அதனால் அனைவருக்கும் உணவு கிடைக்கவே அன்னதானம் வழங்கப்படுகிறது.

அன்னதானம் என்றதும் பட்டென நினைவுக்கு வருவது வழிபாட்டு தலங்கள் தான். மனதில் இருக்கும் சுமையை இறக்கி வைக்க இறைவன் சன்னதியை தேடி செல்கிறோம். இறைவனிடம் உள்ளம் உருக வேண்டியதும் மனபாரம் குறையும். இறைஅருள் மனதில் நிரம்பியதும், பிரசாதம் கிடைக்குமா? என எதிர்பார்ப்பு ஏற்படும்.

அந்த நேரத்தில் அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கினால் எப்படி இருக்கும்? மனமும், வயிறும் நிரம்பினால் சொர்க்கமாக தோன்றும். அதனாலேயே தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று கூறியிருக்கின்றனர். பழங்காலம் முதலே அன்னதானம் வழங்கும் பழக்கம் உள்ளது. பக்தர்கள் மட்டுமின்றி இயலாதோரும் வயிறாற உண்டு, பசியாற வைப்பது அன்னதானம் மட்டுமே.

கோவில்களில் திட்டம்

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், பண்டைய காலம் முதலே அன்னதானம் மூலம் பலருக்கு உணவு வழங்கும் வழக்கத்தையும் கொண்டது. இத்தகைய அன்னதானத்தை அரசே திட்டமாக மாற்றியது. அந்த வகையில், தமிழகத்தில் கடந்த 2002-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அன்னதான திட்டத்தை அப்போதைய முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இந்த திட்டம் சான்றோர்கள், பக்தர்கள் என அனைவரிடமும் வரவேற்பை பெற்றது. தற்போது மாநிலம் முழுவதும் 754 கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறைந்தபட்சம் 25 நபர்களுக்கும் அதிகபட்சம் 200 நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஒரு இலைக்கு ரூ.35 செலவிடப்படுகிறது. இதை தொடர்ந்து 2012-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

நாள் முழுவதும் உணவு

தமிழக சட்டசபையில் 2021-2022-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கையின் போது, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி அதை தொடங்கி வைத்தார்.அதன்படி காலை 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு உணவு பரிமாறப்படுகிறது. தற்போது ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

பழனி கோவில்

இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை சிறிய, பெரிய கோவில்கள் என மொத்தம் 24 கோவில்களில் தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கோவில்களில் அன்னதானம் வழங்குவதை அறநிலையத்துறை அதிகாரிகள் தினமும் கண்காணித்து வருகின்றனர். இதில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலை பொறுத்தவரை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது.

உலக புகழ்பெற்ற பழனிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இங்கு வாழை இலையில் சாதம், சாம்பார், ரசம், மோர், 2 வகை பொரியல், அப்பளம், பாயாசம் என சுவையான உணவு வழங்கப்படுகிறது. இதனால் பழனி முருகனை தரிசனம் செய்யும் பக்தர்கள் தவறாமல் அன்னதானத்தில் சாப்பிட்டு செல்கின்றனர். அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 8 ஆயிரம் பேர் வரை உணவு சாப்பிடுகின்றனர்.

பக்தர்கள்

பழனி முருகன் கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட பேபி:- முருகப்பெருமானை தரிசனம் செய்த மன நிறைவோடு வெளியே வந்தேன். இங்கு சுவையான அன்னதானம் வழங்குகிறார்கள். சூடான சாதத்துடன் அப்பளம், பொரியல், பாயாசம் சாம்பார், ரசம், மோர் என அனைத்தும் சுவையாக இருக்கிறது. இலையில் உணவு காலியாவதை பார்த்து கேட்டு, கேட்டு பரிமாறுகின்றனர். இதனால் மிகவும் திருப்தியாக இருக்கிறது.

கார்த்தி:- பழனி முருகனை தரிசனம் செய்ய வரும் போது எல்லாம் தவறாமல் அன்னதானம் சாப்பிட்டு விட்டு செல்கிறேன். அன்னதானத்தை பிரசாதமாக தான் நினைக்கிறேன். சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்ததும் வயிறாற உணவு கிடைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. உள்ளூர், வெளியூர்களில் இருந்து பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நாம் போதும் என்று கூறும்வரை உணவு வழங்குகின்றனர்.

வடமதுரை, திண்டுக்கல்

வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட மல்லிகா:- தினமும் உணவில் சாம்பார், ரசம், மோர், கூட்டு, ஊறுகாய் பரிமாறுகின்றனர். இதுவே போதுமானதாக இருக்கிறது. தினமும் 50 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஒருசில நாட்களில் கூடுதலாக மக்கள் வந்தாலும் மறுக்காமல் உணவு வழங்கப்படுகிறது.

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட கல்யாணி:- தினமும் மதியம் சரியான நேரத்தில் உணவு வழங்குகின்றனர். உணவு மிகவும் நன்றாக இருக்கிறது. கூடுதலாக ஒரு பொரியல் அல்லது அப்பளம் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

ரெங்கராஜ்:- கோவிலுக்கு வருபவர்களுக்கு உணவு வழங்குவது நல்ல விஷயம். உணவு கிடைக்காத பலருக்கு கோவிலில் வழங்கப்படும் அன்னதானம் தான் உணவாக இருக்கிறது. ஒருசில நாட்களில் தாமதமாக மதியம் 2 மணிக்கு வந்தால் கூட உணவு வழங்குகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story