ஈரோடு தொகுதி தேர்தலில் போட்டியிட அண்ணாமலைக்கு தைரியம் இருக்கிறதா?


ஈரோடு தொகுதி தேர்தலில் போட்டியிட அண்ணாமலைக்கு தைரியம் இருக்கிறதா?
x

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தலில் பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதற்கு தைரியம் இருக்கிறதா? என்று திருவண்ணாமலையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சவால் விடுத்து பேசினார்.

திருவண்ணாமலை

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தலில் பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதற்கு தைரியம் இருக்கிறதா? என்று திருவண்ணாமலையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சவால் விடுத்து பேசினார்.

மண்டல ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 'அரசியலமைப்பை பாதுகாப்போம்', 'கையோடு கை கோர்ப்போம்' என்ற பரப்புரை இயக்க மண்டல ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் திருவண்ணாமலை, வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் தலைவர் செங்கம் ஜி.குமார் தலைமை தாங்கினார். திருவண்ணமாலை நகர தலைவர் வெற்றிசெல்வன் முன்னிலை வகித்தார்.

மாவட்ட துணை தலைவர் புருசோத்தமன் வரவேற்றார். இதில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி.க்கள் ஜெயக்குமார், கொடிகுணல் சுரேஷ், எம்.எல்.ஏ.க்கள் பிரான்சிஸ், அசன் ஆகியோர் வாழ்த்தி பசினர்.

சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

நடைபயணம்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை நடந்து வருகிறார். அவர் எங்களுக்காககோவா அல்லது கட்சிக்காகவோ நடைபயணம் மேற்கொள்ளவில்லை. இந்தியாவில் ஒற்றுமை நிகழ வேண்டும் என்பதற்காக அதனை நடத்தி வருகிறார்.

பிரதமர் மோடி நம்மை இஸ்லாமியர்களாகவும், கிறிஸ்தவர்களாகவும், தலித்துகளாகவும் பிரித்து பார்க்கிறார். ஆனால் இந்த நாட்டில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ளவர்களை ஒற்றுமையாக பார்ப்பது காங்கிரஸ் கட்சி தான்.

கிராமங்களில் கொடி ஏற்ற வேண்டும்

இன்றைக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110-க்கு விற்கப்படுகிறது. நாம் ஆட்சியில் இருக்கும்போது ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.70-க்கு கொடுத்தோம். ஆனால் மோடியால் அது முடியவில்லை. நாம் அதிக வரி விதிக்கவில்லை. பா.ஜ.க. அதிக வரி விதிக்கிது.

100 நாள் வேலை திட்டம் குடும்ப பெண்களுக்காக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முயற்சியால் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அரசு கொண்டு வந்தது.

இதன் மூலம் இளம்பெண்கள் முதல் 80 வயது முதியவர் வரை பயன்பெற்றனர். 15 கோடி குடும்பத்தினரை வறுமையில் இருந்து மீட்டோம். ஆனால் இன்றைக்கு பா.ஜ.க. அனைவரையும் மீண்டும் வறுமை கோட்டிற்கு கீழே கொண்டு வந்து விட்டனர்.

இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்காத இவர்கள் ஆட்சி செய்வதற்கு தகுதியற்றவர்கள்.

இன்றைக்கு இந்தியாவில் தமிழகம் கல்வியில் தலைநிமிர்ந்து நிற்கிறது என்று சொன்னால் அதற்கு காரணம் பெருந்தலைவர் காமராஜர் தான். அனைத்து கிராமங்களிலும் ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடம் இருக்க வேண்டும் என்று கொண்டு வந்தவர் காமராஜர்.

மேலும் அவர் பள்ளிகளில் இலவசமாக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். மகாத்மா காந்தி தண்டி யாத்திரையை தொடங்கிய போது அவருக்கு எப்படி ஆதரவு அளிக்கப்பட்டதோ அது போன்று ராகுல்காந்திக்கும் மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது.

கையோடு கை கோர்த்து இயக்கத்தை வலுப்படுத்த நாம் கிராமம் தோறும் காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்ற வேண்டும்.

அண்ணாமலைக்கு சவால்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

நான் மிகுந்த தைரியத்தோடு அண்ணாமலைக்கு நேரடியாக ஒரு சவால் விடுகின்றேன். அவர் அ.தி.மு.க.வை விட நாங்கள் தான் பெரிய கட்சி என்று சொன்னார்.

அவர் நாடாளுமன்ற தேர்தலில் தனியாக நிற்பதற்கு முன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நிற்க முடியுமா. தனியாக கூட நிற்க வேண்டாம்.

அ.திமு.க. கூட்டணியோடு அண்ணாமலை நிற்பதற்கு தைரியம் இருக்கிறதா. தைரியம் இருந்தால் அண்ணாமலை நின்று காட்டட்டும். யார் வெற்றி பெறுகிறார் என்று பார்ப்போம். நாங்கள் தேவையில்லாமல் யாரிடமும் சவால் விட மாட்டோம்.

எங்கள் கூட்டணி கொள்கை உள்ள கூட்டணி. அ.தி.மு.க. கூட்டணியில் இந்த தேர்தலில் நிற்பதற்கு தயங்குகின்றனர்.

அவர்களின் கூட்டணியில் தேர்தலை சந்

திக்க கூடிய ஆற்றல் இல்லை. இவ்வளவு தான் அவர்களின் பலம். நாம் தேர்தல் களத்தில் நமது வேட்பாளரை இறக்கி விட்டு உள்ளோம். ஆனால் அவர்கள் யார் நிற்க வேண்டும் என்ற பந்தை அவர்களுக்கு உள்ளேயே உதைத்து கொள்கின்றனர். எங்களோடு பந்தை உதைப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. இதுவரை அவர்கள் அந்த களத்திற்கு வரவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் காமராஜ், மோகன், குமார், வினோதினி, துரைமுருகன், மாவட்ட பொருளாளர் சண்முகம் உள்பட மாநில, மாவட்ட, நகர மற்றும் அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story