கோவில்களில் வழங்கும் அன்னதானம் மனநிறைவை தருகிறதா?


கோவில்களில் வழங்கும் அன்னதானம் மனநிறைவை தருகிறதா?
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்களில் வழங்கும் அன்னதானம் மனநிறைவை தருகிறதா? என்று பக்தா்கள் மனம் திறந்தாா்கள்.

கள்ளக்குறிச்சி

தானத்தில் சிறந்தது அன்னதானம். இது பசியுற்றோருக்கு உவந்து வழங்குவதை குறிக்கும். பசியோடு இருப்பவர்களுக்கு உணவளிப்பது சிறந்த மனித பண்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலைநாடுகளில் உணவு வங்கிகள் மூலமும், உறையுள்கள் மூலமும் உணவற்றோருக்கு உணவு வழங்கப்படுகிறது.

கோவில்களில் அன்னதானம்

மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரோ என்ற மணிமேகலை காப்பிய வரிகளுக்கு ஏற்ப தமிழகத்தில் கடந்த 2002-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் அன்னதான திட்டத்தை முதன்முதலில் அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின்படி குறைந்தது 50 பேருக்கும், அதிகபட்சம் 300 பேருக்குமாக அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. கோவில்களில் உச்சிகால பூஜை முடிந்தவுடன் பக்தர்களுக்கு வழங்கும் பிரசாதமாக அன்னதான திட்டம் அமைந்துள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர். ஆன்றோர்கள், சான்றோர்கள், பக்தர்களின் மிகுந்த வரவேற்பை பெற்ற இத்திட்டம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது தமிழகம் முழுவதும் அறநிலையத்துறையின் கீழ் வருகிற 754 கோவில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விரிவுபடுத்தல்

இதனிடையே தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த சில வழிவகைகள் செய்யப்பட்டன. அதன்படி, தமிழக சட்டசபையில் 2021-2022-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின்போது திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில், திருத்தணி சுப்பிரமணியசாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகிய 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு காலை 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தற்போது மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் உள்ளிட்ட சில கோவில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

22 கோவில்களில்...

விழுப்புரம் மண்டலத்திற்குட்பட்ட விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களை பொறுத்தவரை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் மொத்தம் 2,190 கோவில்கள் உள்ளன. இவற்றில் விழுப்புரம் மாவட்டத்தில் மொத்ததம் 1,123 கோவில்கள் உள்ளன. இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்ததம் 1,067 கோவில்கள் உள்ளன.

இவற்றில் விழுப்புரம் மாவட்டத்தில் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியம்மன் கோவில், திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில், பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவில், மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருமடம், திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவில், விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில், விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவில், கீழ்புத்துப்பட்டு மஞ்சனீஸ்வரர் கோவில், கோலியனூர் புத்துவாயம்மன் கோவில், தும்பூர் நாகம்மன் கோவில், சின்னபாபுசமுத்திரம் மகான்படேசாகிப், பிரசன்ன வெங்கடாஜலபதி மற்றும் திரவுபதியம்மன் கோவில்கள், அவலூர்பேட்டை முத்து விநாயகர் கோவில், திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவில் ஆகிய 13 கோவில்களிலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் த்ரிவிக்ரமசாமி கோவில், கீழையூர் வீரட்டேஸ்வரர் கோவில், திருவரங்கம் அரங்கநாதர் கோவில், சித்தலூர் அங்காளம்மன் கோவில், கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவில், சின்னசேலம் திரவுபதியம்மன் கோவில், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவில், வடக்கனந்தல் உமாமகேஸ்வரர் கோவில், பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவில் ஆகிய 9 கோவில்களிலும் மதிய வேளை அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விலைவாசி உயர்வு

மளிகைப்பொருட்கள், காய்கறிகள், கியாஸ் உள்ளிட்டவற்றின் விலை உயர்வால் தற்போது ஒரு சாப்பாட்டுக்கு குறைந்தபட்சம் ரூ.35 செலவிட வேண்டியிருக்கிறது. தற்போதுள்ள விலைவாசியில் 50 பேருக்கு அன்னதானம் வழங்குவது என்பதே சவாலான விஷயமாக இருக்கிறது. வருமானம் சற்று குறைவாக வரக்கூடிய ஒரு சில கோவில்களில் அன்னதானம் வழங்க முடியாமல் சில சமயங்களில் தடுமாறும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. அதனை ஈடுகட்ட நன்கொடையாளர், அன்னதான உண்டியல் வருமானம் ஆகியவற்றின் மூலம் பற்றாக்குறை சரிசெய்யப்பட்டு பக்தர்களுக்கு தடையின்றி அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள கோவில்களில் அன்னதான திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? அங்கு உணவு சாப்பிடும் பக்தர்களுக்கு மனநிறைவு கிடைக்கிறதா? என்று அறிந்துகொள்வதற்காக கோவில்களில் சென்று பார்த்தபோது அங்கு வயிறாற உணவு சாப்பிட்ட பக்தர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

சிலருக்கு கிடைப்பதில்லை

விழுப்புரம் வி.மருதூரை சேர்ந்த ரகுபதி:- விழுப்புரம் பெருமாள் கோவிலில் வழங்கப்படும் உணவின் சுவை பிரமாதமாக இருக்கிறது. கோவிலில் வைத்து பொய் சொன்னால் அந்த ஆண்டவனிடமே பொய் சொல்வதாக அர்த்தம். அன்னதானம் வழங்குவதில் எந்த குறையும் இல்லை. மனநிறைவோடு சாப்பிடுகிறோம். இத்திட்டம் என்னைப்போன்ற வயதானவர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். மிகவும் முக்கியமாக யாசகம் எடுத்து வருபவர்களுக்கும் இத்திட்டம் பேருதவியாக இருக்கிறது. ஆனால் தினமும் 50 பேருக்குத்தான் அன்னதானம் வழங்கப்படுகிறது. அதுபோல் மதியம் 1 மணிக்கெல்லாம் அன்னதானம் வழங்கி முடித்து விடுவதால் சில பேருக்கு கிடைப்பதில்லை. இதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடு்க்க வேண்டும்.

மனநிறைவு

விழுப்புரத்தை சேர்ந்த சுலோச்சனா:- சாதம் சரியான பதத்தில் இல்லை. இதனால் வயதானவர்கள் சாப்பிட சற்று சிரமமாக இருக்கிறது. மற்றபடி எந்த குறையும் இல்லை. மனநிறைவோடுதான் சாப்பிடுகிறோம். அன்னதான திட்டம் வந்த பிறகு புறநகர் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து கோவிலுக்கு வருபவர்கள், சாமி தரிசனம் முடித்துவிட்டு ஓட்டல்களை தேடிச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ரவா கிச்சடி, பொங்கல்

விழுப்புரம் என்.எஸ்.கே. நகரை சேர்ந்த பச்சையப்பன்:-

சாதம் போதும், போதும் என்ற அளவிற்கு தருகிறார்கள். ஆனால் பொரியல் தருவதில்லை. தினந்தோறும் சாம்பாராகவே தருவதால் முகம் சுழிப்பதாக இருக்கிறது. காரக்குழம்பும் சேர்த்து வழங்கினால் நன்றாக இருக்கும். அதுபோல் காலையிலும், மாலையிலும் கோவிலுக்கு பக்தர்கள் அதிகம்பேர் வருகிறார்கள் என்பதால் அவ்வேளைகளில் இட்லி- சாம்பார், ரவா கிச்சடி, பொங்கல் போன்ற ஏதாவது ஒரு உணவு வகைகளை அளித்து நாள் முழுவதும் அன்னதானம் என்று இத்திட்டத்தை விரிவுப்படுத்தினால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

மக்களிடம் அரிசி வாங்கி...

திருவெண்ணெய்நல்லூர் காமராஜர் வீதியை சேர்ந்த வள்ளலார் முருகன்:-

திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் தினமும் 50 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. சனி, ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் கூடுதலாக மக்கள் வருகின்றனர். அந்த நேரங்களில் ஊர் பொதுமக்களிடம் அரிசி வாங்கி கூடுதலாக சமைத்து வழங்கப்படுகிறது. உணவு நல்ல சுவையாக இருப்பதால் இப்பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்கள், கோவிலுக்கு வருபவர்கள் என அனைவரும் அன்னதானம் சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.

குறை இல்லை

தடுத்தாட்கொண்டூர் அம்முசம்:- எனக்கு யாரும் இல்லாததால் தினமும் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் வந்துதான் மதிய உணவு சாப்பிடுகிறேன். என்னைப்போன்று ஆதரவற்ற நிலையில் இருக்கும் பலருக்கும் கோவிலில் வழங்கப்படும் இந்த அன்னதான திட்டம் வயிற்றுப்பசியை போக்கி வாழ்க்கையை கழிக்க உதவிகரமாக இருக்கிறது. உணவு நன்றாக இருக்கிறது. எந்தவொரு குறையும் இல்லை.

போதும் என்கிற அளவுக்கு உணவு

திண்டிவனம் தீர்த்தகுளம் பகுதியை சேர்ந்த சாந்தி:-

நான் பூ வியாபாரம் செய்து வருகிறேன். போதும், போதும்... என்ற அளவிற்கு உணவு தருகிறார்கள். சாப்பாடு நன்றாகவே இருக்கிறது. எந்த குறையும் இன்றி மனநிறைவோடு சாப்பிடுகிறோம். உபயதாரர்களின் சுபநிகழ்ச்சிகளின்போது வடை, பாயாசத்துடன் உணவு கொடுக்கிறார்கள். உணவு அளிக்கும் அந்த கடவுளுக்கு நன்றி.

திண்டிவனம்- மயிலம் சாலையை சேர்ந்த லீலாராமன்:- நான் தினந்தோறும் பெருமாளை சேவித்த பிறகு கோவிலிலேயே அன்னதானம் சாப்பிடுகிறேன். தேவையான அளவு சாப்பாடு போடுகிறார்கள். சாதம், சாம்பார், ரசம், மோர், பொரியல் என தினமும் உணவில் இடம்பெறுகிறது.

உணவு திருப்தியாக உள்ளது

கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட ஆராயி:- இங்கு சாம்பார், ரசம், பொரியலுடன் சாப்பாடு வழங்கப்படுகிறது. சாப்பாடு சுவையாகவும், திருப்தியாகவும் உள்ளது. அமர்ந்து சாப்பிடுவதற்கு டேபிள் வசதி இல்லாததால் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்கள் தரையில் அமர்ந்து சாப்பிடுவதில்லை. எங்களைப் போல் ஏழை மக்கள் மட்டும்தான் சாப்பிடுகிறோம்.எனவே அமர்ந்து சாப்பிடுவதற்கு டேபிள் வசதி செய்து தர வேண்டும்.

அன்னதானம் எங்களுக்கு வரப்பிரசாதம்

கள்ளக்குறிச்சி ஸ்ரீ சிவகாமசுந்தரி சிதம்பரேஸ்வரர் கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட தனபாக்கியம்:- வாழை இலை போட்டு சாதம், சாம்பார், ரசம் பொரியலுடன் உணவு பரிமாறுகிறார்கள். எங்களுக்கு மிகவும் மன நிறைவாக உள்ளது. இந்த சாப்பாடு ஓட்டல்களில் சாப்பிட்டால் ரூ.80 வரை செலவாகும். எங்களை போல் ஏழை மக்களுக்கு இந்த அன்னதானம் மிகவும் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. இங்கு தினமும் சுமார் 30 முதல் 50 நபர்களுக்கு தான் அன்னதானம் வழங்கப்படுகிறது. கூடுதலாக 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பக்தர்கள் பயனடைவார்கள்.

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அறநிலையத்துறையின் கீழ் வருகிற 22 கோவில்களில் அன்னதான திட்டம் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. எந்தவொரு கோவிலிலும் யாருக்கும் உணவு இல்லை என்று சொல்லி திருப்பி அனுப்புவதில்லை. அனைவருக்கும் வயிறாற உணவு வழங்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் குறைந்தது 100 பேருக்கு உணவு வழங்கி வருகிறோம். மற்ற கோவில்களை காட்டிலும் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் தினமும் பக்தர்கள் கூட்டம் அதிக எண்ணிக்கையில் வருவதால் அங்கு நாள்தோறும் 300 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அமாவாசை நாட்களில் 500 பேருக்கு மேல் சாப்பிடும் அளவிற்கு அன்னதானம் வழங்கி வருகிறோம். அவ்வப்போது அன்னதான கூடத்தில் வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்கிறோம். அதுபோல் அன்னதானம் சாப்பிட வருபவர்களிடமும் கருத்து களை கேட்டு வருகிறோம். பக்தர்கள் அனைவருமே, உணவு சிறப்பான முறையில் இருப்பதாக தெரிவிக்கின்றனர் என்றார்.


Next Story