சத்தி அரசு பெண்கள் பள்ளியில் தெருநாய்கள் கடித்து 5 மாணவிகள்- 2 ஆசிரியர்கள் காயம்
சத்தி அரசு பெண்கள் பள்ளியில் தெருநாய்கள் கடித்து 5 மாணவிகள்- 2 ஆசிரியர்கள் காயம்
புஞ்சைபுளியம்பட்டி
சத்தியமங்கலம் கோபி ரோட்டில் பஸ் நிலையம் அருகே அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கூட வளாகத்தில் மாணவிகள் சிலர் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது பள்ளிக்கூட வளாகத்தில் புகுந்த 5 தெருநாய்கள் அங்கிருந்த மாணவிகளை கடித்தது. இதில் 5 மாணவிகள் காயம் அடைந்தனர். வலி தாங்க முடியாமல் அவர்கள் சத்தம் போடவே ஆசிரியர்கள் அங்கு சென்று நாய்களை விரட்ட முயன்றனர். அப்போது அவர்களையும் நாய்கள் கடித்தன. இதில் 2 ஆசிரியர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதை பார்த்த பொதுமக்கள் அங்கு சென்று நாய்களை விரட்டி விட்டனர். பின்னர் காயம் அடைந்த 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.
இதுகுறித்து பெற்றோர்கள் கூறும்போது, 'பள்ளிக்கூட வளாகத்தில் புகுந்து மாணவிகளை கடித்த தெருநாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.