தெரு நாய்கள் வெறிநாயாக மாறினால் என்ன செய்யவேண்டும்?
தெரு நாய்கள் வெறிநாயாக மாறினால் என்ன செய்யவேண்டும்?
போடிப்பட்டி
தெருநாய்கள் வெறிநாய்களாக மாறும்போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த வழிகாட்டல்களை உள்ளாட்சி நிர்வாகங்கள் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வழிகாட்டி
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-மனிதர்கள் வேட்டை சமூகமாக இருந்த காலத்திலிருந்து அவர்களோடு தன் வாழ்வியலை இணைத்து கொண்டவை நாய்கள் ஆகும். நன்றியுள்ள ஜீவன் என்பதற்கான உதாரணமாக நாய்களைத் தான் சுட்டிக் காட்டுகிறோம். மனிதர்களின் பாதுகாவலனாகவும், வழிகாட்டியாகவும், நண்பனாகவும் என பல முகங்கள் கொண்டவையாக நாய்கள் விளங்குகின்றன. இதனால் வீடுகளில் நாய்களை வளர்ப்பதில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
அதேநேரத்தில் தெருக்களில் தன்னிச்சையாக வளரும் தெரு நாய்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்து வருகிறது. நாய்களை பொறுத்தவரை ஒரே நேரத்தில் 5-க்கும் மேற்பட்ட குட்டிகள் போடும் தன்மை கொண்டது. இதனால் நகரப் பகுதியில் மட்டுமல்லாமல் கிராமப் பகுதிகளிலும் தெரு நாய்கள் இல்லாத தெருக்கள் இல்லை என்று சொல்லுமளவுக்கு அனைத்து தெருக்களிலும் நாய்கள் அதிக எண்ணிக்கையில் வலம் வருகின்றன. இந்த நாய்களால் ஏற்படும் விபத்துக்கள், அச்சுறுத்தல்கள் போன்றவற்றால் தினசரி பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
லைசென்ஸ்
தெரு நாய்களுக்கு வெறி பிடித்தால் தினசரி உணவு இடுபவரையும் கடித்துக் குதறி விடும் அபாயம் உள்ளது. மேலும் வெறி நாய்கள் கடிப்பதால் மட்டுமல்லாமல், நகத்தால் கீறினாலோ, நமது உடலிலுள்ள காயங்களில் வெறி நாய்களின் எச்சில் பட்டாலோ ரேபிஸ் எனப்படும் கொடிய நோய் தாக்கும் அபாயம் உள்ளது.ஆனால் இத்தகைய வெறி நாய்களை அப்புறப்பபடுத்தவோ, கொல்லவோ உள்ளாட்சி நிர்வாகங்களிடம் எந்த திட்டமும் இல்லை. கடந்த காலங்களில் வீட்டு நாய்களுக்கு லைசென்ஸ் வழங்கும் முறையும், தெரு நாய்களைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் அவற்றை பிடித்து கொல்லும் நடைமுறையும் இருந்தது.இதற்கு விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தெரு நாய்களைக் கொல்லும் நடைமுறை கைவிடப்பட்டது.
அதற்கு மாற்றாக தெரு நாய்களைப் பிடித்து அவற்றுக்கு கருத்தடை செய்வதன் மூலம் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் திட்டம் தற்போது வரை நடைமுறையில் உள்ளது.ஆனால் அதற்கு அதிக செலவு பிடிப்பதால் முழுமையாக செயல்படுத்த முடியாத நிலை உள்ளது.
கொல்ல அனுமதி
தெரு நாய்களில் வெறி நாய் எது என்பதை ஆரம்ப நிலையில் கண்டறிவது சிரமமாக உள்ளதால் பலரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.இதுவே இந்தியா முழுவதும் ஆண்டுக்கு 20 ஆயிரத்துக்கும் மேல் நாய்க்கடியால் உயிரிழப்பதற்கு காரணமாகிறது என்று உலக சுகாதார நிறுவனம் சுட்டிக் காட்டுகிறது.இந்தநிலையில் உடுமலை பகுதியில் ஒரு நாய்க்கு வெறி பிடித்து உயிருக்குப் போராடியுள்ளது. இதன்மூலம் மற்ற நாய்களுக்கோ, மனிதர்களுக்கோ பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த வெறிநாயை அப்புறப்படுத்தவோ, கொல்லவோ எங்களுக்கு அதிகாரம் இல்லை.அது உயிரிழந்து விட்டால் சொல்லுங்கள், அதனை அப்புறப்படுத்துவது மட்டுமே எங்களால் முடியும் என்று இயலாமையுடன் பதில் கூறியுள்ளனர்.
பாதுகாக்கப்பட்ட விலங்கினமாக இருக்கும் புலியாக இருந்தால் கூட மனிதர்களுக்கு தீங்கு விளைவித்தால் அதனை சுட்டுக் கொல்ல அனுமதி வழங்கப்படுகிறது.ஆனால் வெறி பிடித்த தெரு நாய்களைக் கொல்ல அனுமதி வழங்கப்படாதது ஏன் என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.தெருநாய்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய அதேநேரத்தில் விலங்கு நல ஆர்வலர்களுக்கு சூழ்நிலையின் தீவிரத்தை புரிய வைத்து வெறி நாய்களைக் கொல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.இதன்மூலம் பொதுமக்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் பாதுகாப்பு கிடைப்பதுடன், இது கருணைக்கொலை என்ற வகையிலேயே சேரும்'என்று அவர்கள் கூறினர்.