ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த நாய் குட்டி 5 மணி நேரம் போராடி மீட்பு
திருவாரூர் அருகே ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த நாய் குட்டி 5 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மீட்கப்பட்டது.
திருவாரூர்:-
திருவாரூர் அருகே ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த நாய் குட்டி 5 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மீட்கப்பட்டது.
ஆழ்குழாய் கிணற்றில் நாய் குட்டி
திருவாரூர் அருகே உள்ள குன்னியூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் மூர்த்தி(வயது 45). இவருடைய வீட்டின் அருகே 15 அடி ஆழம் கொண்ட ஆழ்குழாய் கிணறு ஒன்று இருந்தது. அதில் இருந்து தண்ணீர் கிடைக்காததால் அப்படியே திறந்த நிலையில் காணப்பட்டது.
இந்த கிணற்றில் இருந்து சத்தம் கேட்டது. இதையடுத்து மூர்த்தி டார்ச் லைட் மூலமாக கிணற்றுக்குள் பார்த்தார். அப்போது கிணற்றுக்குள் நாய் குட்டி ஒன்று விழுந்து கிடப்பதை பார்த்தார்.
இதையடுத்து அவர் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்து கயிறு மூலமாக அந்த நாய் குட்டியை மீட்க முயற்சி மேற்கொண்டார். அந்த முயற்சி பலன் அளிக்காமல் போகவே, மூர்த்தி உடனடியாக சென்னை பேரிடர் மேலாண்மை குழுவுக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்தார்.
5 மணி நேரம் போராட்டம்
அவர்கள் திருவாரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து திருவாரூர் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று நாய் குட்டியை மீட்க முயற்சி மேற்கொண்டனர்.
அதன்படி பொக்லின் எந்திரத்தை வாடகைக்கு எடுத்து வந்து ஆழ்குழாய் கிணற்றின் பக்கவாட்டில் 15 அடிக்கு பள்ளம் தோண்டினர். அந்த பள்ளத்தில் தீயணைப்பு வீரர்கள் இறங்கி ஆழ்குழாய் கிணற்றின் பக்கவாட்டில் உள்ள மண்ணை தோண்டி எடுத்து நாய் குட்டியை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.
காலை 8.30 மணி அளவில் ஆழ்குழாய் கிணற்றில் நாய் குட்டி விழுந்தது கண்டறியப்பட்ட நிலையில் 5 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மதியம் 1.30 மணி அளவில் நாய் குட்டி மீட்கப்பட்டது.
பாராட்டு
நாய் குட்டியை ஆழ்குழாய் கிணற்றில் இருந்து வெளியில் எடுத்தவுடன் அதை மகிழ்ச்சி பொங்க மூர்த்தி தூக்கி கொஞ்சினார். நாய் குட்டிக்காக தனது சொந்த பணத்தை செலவு செய்து பொக்லின் எந்திரத்தை வரவழைத்து அதனை உயிருடன் மீட்ட மூர்த்தியை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பாராட்டினர்.
இதனிடையே அங்கு இருந்த ஆழ்குழாய் கிணறு முழுவதுமாக மூடப்பட்டது.