கொடைக்கானலில் 2-வது நாளாக நாய்கள் கண்காட்சி; பல்வேறு போட்டிகளில் பங்கேற்று அசத்திய நாய்கள்


கொடைக்கானலில் 2-வது நாளாக நாய்கள் கண்காட்சி; பல்வேறு போட்டிகளில் பங்கேற்று அசத்திய நாய்கள்
x
தினத்தந்தி 27 Feb 2023 3:00 AM IST (Updated: 27 Feb 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் 2-வது நாளாக நாய்கள் கண்காட்சி நடந்தது. இதில், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று நாய்கள் அசத்தின.

திண்டுக்கல்

கொடைக்கானலில் 2-வது நாளாக நாய்கள் கண்காட்சி நடந்தது. இதில், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று நாய்கள் அசத்தின.

நாய்கள் கண்காட்சி

மெட்ராஸ் கெனன் கிளப், சேலம் கெனல் கிளப் மற்றும் கொடைக்கானல் கெனல் அசோசியேஷன் ஆகியவை சார்பில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி, கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

முதல் நாளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 48 வகைகளை சேர்ந்த 286 நாய்கள் கலந்து கொண்டன. அப்போது அந்த நாய்கள், தங்களது உரிமையாளர்களுடன் வந்து பார்வையாளர்களை கவர்ந்தன. கண்காட்சியில் பங்கேற்ற நாய்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

கீழ்ப்படிதல், துப்பறியும் திறன், குணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நாய்களுக்கு போட்டி நடத்தப்பட்டது. பின்னர் போட்டிகளில் வெற்றிபெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சாம்பியன் பட்டம்

இந்தநிலையில் 2-வது நாளாக நேற்றும் கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி நடந்தது. இதில், பல்வேறு உயர்ரக நாய்கள் பங்கேற்றன. மேலும் நாய்களுக்கு பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன.

இதில், மராட்டிய மாநிலம் புனேயில் இருந்து வந்திருந்த கிரேட் டேன் ரக நாயும், மற்றொரு பிரிவில் ஹைதராபாத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட டாபர்மேன் நாயும் முதலிடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.

இதேபோல் 2-வது பரிசை ஒடிசாவில் இருந்து வந்திருந்த ஆஸ்திரேலியா ஷெப்பர்ட் வகை நாயும், சென்னையில் இருந்து வந்த ஜெர்மன் ஷெப்பர்ட் ரக நாயும் பிடித்தன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற நாய்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

சுற்றுலா பயணிகள்

நாய்கள் கண்காட்சியை பொதுமக்கள் மற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள், மாணவ-மாணவிகள் உள்பட பலரும் பார்வையிட்டு ரசித்தனர். நாய்கள் கண்காட்சி மற்றும் போட்டியில் நடுவர்களாக செர்பியன் நாட்டை சேர்ந்த இஸ்ட்வான், பீட்டர்தெரிக், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜாய், டெரிக் கிலோரா, மலேசியாவை சேர்ந்த திரிவேதி உள்ளிட்ேடார் செயல்பட்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை மெட்ராஸ் கெனன் கிளப்பின் தலைவர் சுதர்சன், செயலாளர் சித்தார்த், கொடைக்கானல் கெனல் அசோசியேஷன் செயலாளர் ஜெய்கேஷ் ஜெயதிலகர் ஆகியோர் செய்திருந்தனர். 2 நாட்கள் நடந்த நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.


Next Story