கொடைக்கானலில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி
கொடைக்கானலில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி தொடங்கியது.
கொடைக்கானலில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி தொடங்கியது.
நாய்கள் கண்காட்சி
மெட்ராஸ் கெனன் கிளப், சேலம் கெனல் கிளப் மற்றும் கொடைக்கானல் கெனல் அசோசியேஷன் சார்பில் தேசிய அளவிலான 2 நாட்கள் நடக்கும் நாய்கள் கண்காட்சி, கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நேற்று தொடங்கியது.
இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுடெல்லி, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான நாய்கள் கலந்துகொண்டன. ஜாக்ரசல் பேஷன்சி, அமெரிக்கன் ஸ்டாப்பட், டெரியர், கெயின்கார்சோ, பர்னிஷ் மவுண்டன், கார்டன் ஹெட்டர், பாசான் பிரிஸ், ஆஸ்திரேலியா செப்பர்டு, ஜெர்மன் ஷெப்பர்ட், கிரேட்டேன், அஸ்கர் மற்றும் தமிழக வகைகளான சிப்பிப்பாறை, ராஜபாளையம், கன்னி, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முதுர்கவுடர் உள்பட 48 வகைகளை சேர்ந்த 286 நாய்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றன.
அப்போது உரிமையாளர்கள் தங்களது நாய்களுடன் மைதானத்தில் வலம் வந்து காட்சிப்படுத்தினர். இதில் விதவிதமான உயர்ரக நாய்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
பரிசு, சான்றிதழ்
இதற்கிடையே கண்காட்சியையொட்டி நேற்று நாய்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. நாய்களின் ஞாபகசக்தி, துப்பறியும் திறன், குணங்கள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு இந்த போட்டிகள் நடத்தப்பட்டது. பின்னர் அதில் வெற்றிபெற்ற நாய்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு மெட்ராஸ் கெனன் கிளப் தலைவர் சுதர்சன் தலைமை தாங்கினார். செயலாளர் சித்தார்த் முன்னிலை வகித்தார். கொடைக்கானல் கெனல் அசோசியேசனை சேர்ந்த ஜெய்கேஸ் ஜெயதிலகர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு, போட்டியில் வெற்றிபெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு சுழற்கோப்பையுடன் பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினர்.
இந்த நாய்கள் கண்காட்சி மற்றும் போட்டிகள் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்து நடைபெறுகிறது.
விஜயகாந்த் மகனின் நாய்கள்
இதுகுறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், நாய்கள் கண்காட்சி மற்றும் போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து விலை உயர்ந்த நாய்களை உரிமையாளர்கள் கொண்டு வந்து காட்சிப்படுத்தியுள்ளனர். இன்று 2-வது நாளாக கண்காட்சி மற்றும் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் முடிந்தவுடன் சிறந்த நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது என்றனர்.
இந்த கண்காட்சியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய்பிரபாகரன் கலந்துகொண்டார். அப்போது அவர் தனக்கு சொந்தமான டேசன்ட், ஹஸ்கி, டாபர்மேன், கிரேட்டேன், ராஜபாளையம் நாய் உள்பட 7 உயர்ரக நாய்களை கண்காட்சியில் காட்சிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.