தடுப்பூசி போட வந்த இடத்தில் நாய்கள் மோதிக்கொண்டதால் பரபரப்பு
தடுப்பூசி போட வந்த இடத்தில் மோதிக்கொண்ட நாய்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி அருகே கட்டிகானப்பள்ளி ஊராட்சி கீழ்புதூரில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இதில் கால்நடை வளர்ப்பவர்கள், தங்களின் நாய்களுக்கு தடுப்பூசி போட கொண்டு வந்தனர். அப்போது அங்கிருந்த பிட்புல் ரக நாய் ஒன்று. அதன் உரிமையாளரின் பிடியில் இருந்து ஓடி அங்கு நின்ற ஒரு நாயை கடிக்க தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பொதுமக்களில் சிலர் அந்த நாயை மீட்க முயன்றனர். ஆனாலும் விடாமல் பிட்புல் நாய், மற்றொரு நாயை கடிக்க பாய்ந்தது. ஒரு கட்டத்தில் பொதுமக்கள் அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி போட்டும், நாயை அடித்தும் விரட்ட முயன்றனர். ஆனாலும் விடாமல் அந்த நாய், மற்றொரு நாயை துரத்தி கடிக்க முயன்றது. நீண்ட நேரத்திற்கு பிறகு பிட்புல் நாயின் உரிமையாளர் அதை பிடித்து, இழுத்து சென்றார். கடித்ததில் அந்த நாய்க்கு காயங்கள் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. வெறிநோய் தடுப்பூசி போட வந்த நாயே வெறி பிடித்தது போல மற்றொரு நாயை கடிக்க முயன்றதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.